கியூரியா கார்டன் சந்திப்பில் தினமும் விபத்து; வேகத்தடை அமைத்தால் தடுக்கலாம் உயிரிழப்பு
பள்ளத்தால் தொடரும் விபத்து
சிங்காநல்லுார் பேருந்து நிறுத்தம், காமராஜர் சாலையில் ஐந்து அடிக்கு பெரிய பள்ளம் உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, இந்த பள்ளத்தால் அதிக விபத்து நடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தாக உள்ள இந்த பள்ளத்தை, விரைந்து சரிசெய்ய வேண்டும்,- சரவணக்குமார், சிங்காநல்லுார். போக்குவரத்து நெருக்கடி
பாலக்காடு ரோடு, மரப்பாலம் சுரங்க பாதையை அடுத்து சாலையோரம் பழக்கடைகள்உள்ளன. இந்த கடைகளுக்கு வருவோர், வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். ஏற்கனவே நெருக்கடியான பாதையில், இந்த வாகனங்களால்மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.- கார்த்திக், எட்டிமடை. தெருவிளக்கு பழுது
பீளமேடு, சாஸ்திரி வீதியில், 23வது வார்டு, பி.ஆர்.புரத்தில், 'எஸ்.பி -13, பி-5' என்ற எண் கொண்ட கம்பத்தில் கடந்த ஒரு வாரமாக, தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், விரைந்து பழுதை சரிசெய்ய வேண்டும்.- செல்வநாராயணன், பீளமேடு. சந்திப்பில் அடிக்கடி விபத்து
போத்தனுார் - செட்டிபாளையம் செல்லும் வழியில், ஈச்சனாரி பிரிவில், நான்கு ரோடுகள் சந்திப்பில். எந்த சாலையிலும்வேகத்தடை இல்லை. காலை, மாலை வேளையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதிவேகமாக வரும் வாகனங்களால், அடிக்கடி விபத்து நடக்கிறது.- மயில், செட்டிபாளையம். அடிப்படை வசதியின்றி தவிப்பு
மலுமிச்சம்பட்டி, அவ்வை நகரில் சுமார் 500 வீடுகள் உள்ளன. சாலைகள் சேதமடைந்துள்ளதால், குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். தெருவிளக்குகளும் பழுதாகி இருப்பதால், இரவு நேரங்களில் கடைகளுக்கு கூட, செல்ல முடியவில்லை.- ஜென்சி, மலுமிச்சம்பட்டி. கால் இடற வைக்கும் கம்பம்
குனியமுத்துார், 87வது வார்டு, நெல்லை முத்து விலாஸ் அருகில் பழுதடைந்த கம்பம் மாற்றப்பட்டது. ஆனால், கம்பத்தை அகற்றாமல் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதையில் போட்டு வைத்துள்ளனர். பலர் கம்பத்தில் கால் தட்டி இடறி விழுகின்றனர்.- சங்கர், குனியமுத்துார். வேகத்தடை வேண்டும்
தொண்டாமுத்துார் ரோடு, கியூரியா கார்டன் சந்திப்பில், அசுர வேகத்தில் வாகனங்கள் செல்கின்றன. பாதசாரிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். சாலையைக் கடக்க முயலும் போது, அடிக்கடி விபத்து நடக்கிறது. இப்பகுதியில் வேகத்தடை அமைப்பதன் மூலம், விபத்துகளை தடுக்கலாம்.- செல்வம், வடவள்ளி. வாகன ஓட்டிகள் அவதி
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, இந்திரா நகர், ஐ.சி.சி., வங்கிக்கு எதிரே, பொள்ளாச்சி சாலை செல்லும் இணைப்புச்சாலையில், பாதாள சாக்கடை சிலேப் உடைந்து குழியாக உள்ளது. குழியை விரைந்து சரிசெய்ய வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை.- பாலகிருஷ்ணன், இந்திராநகர். தடுமாறும்வாகனங்கள்
ராமநாதபுரம் சந்திப்பு அருகே, நஞ்சுண்டாபுரம் சாலையில் குழாய் பதிப்பு பணிகளுக்கு சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் குழிகளை சரிசெய்யவில்லை. பெரிய வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. பைக்கில் செல்வோர், குழிகளால் இடறி கீழே விழுகின்றனர்.- சந்திரமோகன், நஞ்சுண்டாபுரம். மிரட்டும் நாய்கள்
சிங்காநல்லுார், வசந்த் நகர், தசமி பார்க் ரெசிடன்சி செல்லும் வழியில், தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோரையும், பைக்கில் செல்வோரையும் துரத்தி மிரட்டுகின்றன.- நிகில், வசந்த் நகர்.