கறிவேப்பிலை விலை குறைந்தது
மேட்டுப்பாளையம்; கோடை காலம் துவங்கிய நிலையில், ஒரு கிலோ கறிவேப்பிலை, 40 ரூபாய்க்கு மொத்த விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை குறைந்து வருவதால், விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமுகை, காரமடை, மத்தம்பாளையம் ஆகிய பகுதிகளில், 3,500க்கு மேற்பட்ட ஏக்கரில், செங்காம்பு கறிவேப்பிலை பயிர் செய்யப்பட்டுள்ளது. கோடை காலம் துவங்கிய நிலையில், கறிவேப்பிலையின் தேவை குறைந்துள்ளது. வரும் மாதங்களில் திருமண முகூர்த்தங்கள் அதிகளவில் இருக்காது.பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதால், விடுதிகள் மூடப்படும். அதனால் கறிவேப்பிலையின் தேவை பாதியாக குறையும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மழை பெய்யவில்லை என்றால், போதிய தண்ணீர் இல்லாமல் மகசூல் குறையும். தற்போது ஒரு கிலோ கறிவேப்பிலை, 40 ரூபாய்க்கு தோட்டத்தில் விலை கொடுத்து அறுவடை செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஒரு கிலோ, 60 ரூபாய் வரை விற்பனை ஆனது. இலையின் தேவை குறைந்ததால், விலையும் குறைந்துள்ளது.மேலும் ஆந்திரா, சேலம் மாவட்டம் ஆத்துாரில் இருந்து கறிவேப்பிலையின் வரத்து அதிகளவில் உள்ளதால், வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.