உப்பிலிபாளையம் பழைய பாலத்தை 14 மீ. அகலத்துக்கு விஸ்தரிக்க முடிவு
கோவை: கோவை - அவிநாசி ரோடு, மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு ஆகிய நான்கு ரோடுகள் சந்திக்கும் வகையில், உப்பிலிபாளையம் பழைய பாலம் (ரோட்டரி) அமைந்திருக்கிறது. ஜன., 3ல் காஸ் டேங்கர் லாரி திரும்ப முடியாமல் கவிழ்ந்தது. 'பீக் ஹவர்ஸ்' சமயத்திலும், மழை பெய்யும்போது சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கும் போதும் அனைத்து விதமான வாகனங்களும் இப்பாலத்தை பயன்படுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதை தவிர்க்க, விஸ்தரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலும் எழுந்தது. தொழில்துறையினர் தரப்பில் பலவிதமான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சாலை பாதுகாப்பு குழு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. அச்சமயத்தில், தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து டில்லிக்கு அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக, டி.ஆர்.ஓ., ஷர்மிளா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. போக்குவரத்து நெருக்கடியின்றி வாகனங்கள் செல்ல நான்கு ரோடுகளையும் இணைக்கும் வகையில், 'ரோட்டரி' அமைந்துள்ள பகுதியை விஸ்தரிப்பது தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் விளக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'உப்பிலிபாளையம் பழைய பாலம் ரோட்டரி தற்போது 10.5 மீட்டர் அகலத்துக்கு இருக்கிறது. இன்னும் 3.5 மீட்டர் விஸ்தரித்து, 14 மீட்டர் அகலமாக மாற்றப்படும். இந்த வேலையை செய்தாலே போக்குவரத்து நெரிசல் தீர்ந்து விடும். தேசிய நெடுஞ்சாலைத்துறையின் ஆண்டு திட்டத்தில், இப்பணிக்கு 30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. 'திட்ட மதிப்பீடு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. டில்லிக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றதும் விஸ்தரிக்கப்படும்' என்றனர்.