கனரக வாகனங்களுக்கு மாற்றுப்பாதை திருவிழாவின் போது அவசியம்
குமரலிங்கம்; கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது, கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டு, நெரிசலை தவிர்க்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில் இருந்து குமரலிங்கம், கொழுமம், பாப்பம்பட்டி வழியாக பழநிக்கு செல்லும் வழித்தடத்தில், அதிக வாகன போக்குவரத்து உள்ளது.போதிய அகலம் இல்லாததால், வழக்கமான நாட்களிலேயே, குமரலிங்கம் முதல் திருப்பூர் மாவட்ட எல்லையான கோதையம்மன் குளம் வரை போக்குவரத்து நெரிசல் அதிகமிருக்கும்.இந்நிலையில், கொழுமத்தில், பழநி ரோட்டின் அருகில், பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழாவில், சுற்றுப்பகுதியை சேர்ந்த, 25க்கும் அதிகமான கிராம மக்கள் பங்கேற்பது வழக்கம்.கிராம மக்கள் அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம், பூவோடு, காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலுக்கு வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், அமராவதி ஆற்றுப்பாலம் வழியாக கோவிலுக்கு சென்று திரும்புகின்றனர்.இந்நிலையில், திருவிழா காலங்களில் போதிய திட்டமிடல் இல்லாததால், கொழுமம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வாக திருவிழா காலங்களில், உடுமலை மற்றும் பழநியில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கொழுமம் வழியாக செல்லாமல், பாப்பம்பட்டி, குமரலிங்கம் பகுதியில், மாற்றி விட்டால், கோவில் பகுதியில் நெரிசல் முற்றிலுமாக தவிர்க்கப்படும்.கனரக வாகன ஓட்டுநர்களும், பக்தர்கள் என இரு தரப்பினரும் பாதிக்கப்பட மாட்டார்கள். இது குறித்து போலீசார், ஆலோசனை கூட்டம் நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.