ராமகிருஷ்ண மிஷன் சார்பில் ரூ. 1,292 கோடியில் வளர்ச்சிப் பணிகள்
பெ.நா.பாளையம்; ராமகிருஷ்ண மிஷன்சார்பில் ரூ. 1,292 கோடியில் வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளதாகராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் பொதுச் செயலாளர் சுவாமி சுவீதானந்தர் தெரிவித்தார்.இது தொடர்பாக கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இங்கு, 115ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், உலகம் முழுவதும் இந்த அமைப்பின் சார்பில் நடத்தப்படும் பள்ளி, கல்லூரியில் பயிலும், 2.87 லட்சம் ஏழை குழந்தைகள், பெண் குழந்தைகள், மாணவர்களுக்கு சுமார், 712 கோடி ரூபாய் செலவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன.இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள ராமகிருஷ்ண இயக்கத்தின் சார்பில் செயல்படும் மருத்துவமனை, கிராம புற மருந்தகங்கள், நடமாடும் மருத்துவமனைகள் வாயிலாக சுமார், 496 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு செயல் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் வாயிலாக சுமார், 79.28 லட்சம் பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். இது தவிர, கிராமப்புற ஊரக மேம்பாட்டுக்கு என, கிராமப்புற நீராதார திட்டங்கள், சுகாதார திட்டங்கள், வேளாண் திட்டங்களுக்காக, 18.31 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 2.40 லட்சம் பொதுமக்கள் பயனடைந்தனர்.இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.