பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை
வால்பாறை: வால்பாறையில், பள்ளி மாணவர்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகளை சுகாதார பணியாளர்கள் வழங்கினர். சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, வால்பாறையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மாத்திரைகள் வழங்கப்பட்டன. வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பாபுலட்சுமணன் தலைமையில், பள்ளி, அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. ஆரம்ப சுகாதார பணியாளர்கள் கூறியதாவது: குடற்புழு தொற்றினால், ஊட்டச்சத்து குறைபாடு, உடல் சோர்வு மற்றும் சுகவீனம், படிப்பில் கவனமின்மை, ரத்த சோகை, குமட்டல், வாந்தி பாதிப்புக்கள் ஏற்படும். எனவே குடற்புழு தொற்றிலிருந்து விடுபட, 'அல்பெண்டசோல்' என்ற மாத்திரைகளை உட்கொள்வது மிக அவசியம். இரண்டு வயது முதல், 19 வயது வரையான மாணவர்கள் இந்த மாத்திரைகளை உட்கொள்ளலாம். காலை அல்லது மதிய உணவு சாப்பிட்ட பின், அரை மணி நேரம் கழித்து இந்த மாத்திரைகளை மாணவர்கள் உட்கொள்ள வேண்டும். இதனால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது. இவ்வாறு, கூறினர்.