உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வீடு தேடிவரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

 வீடு தேடிவரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

உடுமலை: ஓய்வூதியதாரர்களுக்கு, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் பதிவு செய்யும் சிரமத்தை குறைக்க, வீடுதேடி வரும் தபால்காரரிடம் நேரடியாக பதிவு செய்யும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் இதர ஓய்வூதியதாரர்கள் நவ. 1 முதல் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். நேரில் சென்று சமர்ப்பிக்கும்போது, அவர்கள் படும் சிரமத்தை தவிர்க்கும் விதமாக வீட்டிலிருந்தபடியே தபால்காரர் வாயிலாக, பயோமெட்ரிக் அல்லது பேஸ் ஆர்.டி. ஆப் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிராமன்) சமர்ப்பிக்க தபால்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவைக்கட்டணமாக 70 ரூபாய். இதுகுறித்து, திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் கூறியதாவது: ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல், பி.பி. ஓ. எண் மற்றும் ஓய்வூதியக்கணக்கு விபரத்தை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க இயலும். அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டி.ஓ.பி.பி.டபிள்யூ மற்றும் இந்திய தபால் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கி' தபால்காரர் வாயிலாக, விழிப்புணர்வு வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இந்த டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சேவையை பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது தங்கள் பகுதி தபால்காரரை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த சேவையை வழங்க அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை