தினமலர் - பட்டம் மெகா வினாடி - வினா போட்டி துவக்கம்; பதில் சொல்லி பரிசு வெல்ல மாணவர்கள் ஆர்வம்
கோவை : 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி-வினா போட்டி, கோவைப்புதுார் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், நேற்று துவங்கியது.பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆய்வுத்திறன், கணிதம், மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில்,'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் வெளியிடப்படுகிறது.இதை வாசிக்கும் மாணவர்களிடம், கற்றல் சார்ந்த தேடலை விரிவுபடுத்தும் விதத்திலும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தவும், 2018 முதல் 'வினாடி-வினா' போட்டி நடத்தப்படுகிறது. நேற்று துவக்கம்
இந்தாண்டுக்கான 'வினாடி வினா' போட்டி,'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், கோவைப்புதுார், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது. 'கோ-ஸ்பான்சர்' ஆக சத்யா ஏஜென்சிஸ் உள்ளது.நேற்று பள்ளியில் நடந்த தகுதி தேர்வில், 400 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், அதில் அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், 8 அணிகளாக பிரிந்து இறுதிச்சுற்று போட்டியில் பங்கேற்றனர்.மூன்று சுற்றுகளாக நடந்த வினாடி-வினா போட்டியில், முதல் பரிசை 'இ' அணியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி விவ்யா, ஏழாம் வகுப்பு மாணவர் பிரணவ் ஆகியோர் வென்றனர்.இறுதிச்சுற்றில் பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கவுரி உதயேந்திரன், முதல்வர் சரண்யா ஆகியோர் வழங்கினர். 150க்கும் மேற்பட்ட பள்ளிகள்!
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் அரையிறுதியில் பங்கேற்பர். இதில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டி நடத்தப்படும்.
வைக்கிறது 'பட்டம்'
மாணவி விவ்யா: பட்டம் இதழ் படிக்கும் போது, மிகவும் உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கும். அதில், பொது தகவல்களுடன் கூடிய அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். தேர்வில் சமன்பாடுகள், கணித கோட்பாடு ஆகியவற்றுக்கு தீர்வு காணவும், இந்த இதழ் உதவுகிறது. புத்தாக்கம் காணவும், ஆலோசனைகள் வழங்கும் பட்டம் இதழ், மாணவர்களின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.மாணவர் பிரணவ்: பட்டம் வினாடி-வினா போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், பொது அறிவு சார்ந்ததாக இருந்தது. சில வினாக்கள் கடினமாக இருந்தன. சில வினாக்கள் பதில் அளிக்கும் விதத்தில் இருந்தன. அடுத்த கட்ட போட்டிக்கு, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சம்பவங்கள், செய்திகளில் கவனம் செலுத்த உள்ளேன். தேர்வுகளுக்கு தயாராக பட்டம் இதழ் கை கொடுக்கிறது.