தக்காளியில் நோய் மேலாண்மை; தோட்டக்கலைத்துறை விளக்கம்
பொள்ளாச்சி; தக்காளி செடியில், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை மேற்கொள்வது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சவுமியா அறிக்கை: தக்காளி செடியில், பூச்சியை கட்டுப்படுத்த வேதியியல் முறை உடன், உயிரியல் முறைகளையும் பயன்படுத்தும் போது, குறைந்த செலவில் விஷத்தன்மையற்ற காய்களை உற்பத்தி செய்ய முடியும்.பொள்ளாச்சியில் அதிகம் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளில் ஒன்று தக்காளி. இந்நிலையில், தக்காளியில் அதிகளவில் பூச்சி, நோய் பாதித்து மகசூல் பாதிக்கிறது.தக்காளி பயிருக்கு அதிக சேதத்தை விளைவிக்கும் காய் துளைப்பானை கட்டுப்படுத்த அப்பூச்சியை கவரும் செண்டுமல்லி செடியை, தக்காளி பயிரிடுவதற்கு, 15 நாட்களுக்கு முன்பே 16 வரிசைக்கு ஒரு வரிசை என்ற முறையில் பயிரிட வேண்டும்.ஒரு ெஹக்டேருக்கு, 12 என்ற எண்ணிக்கையில் இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து காய் துளைப்பானை கவர்ந்து அளிக்கலாம். இது தவிர, தக்காளி பயிரை தாக்கும் இலை சுருள் நோயை கட்டுப்படுத்த, அந்நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த வேண்டும்.இலைசுருள் நோயால் பாதிக்கப்பட்ட செடிகளை முழுவதுமாக அகற்றி அழித்திட வேண்டும். நோயை பரப்பும் வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஒரு ெஹக்டேருக்கு, 12 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் நிற ஒட்டுப்பொறியை பயன்படுத்தலாம்.இதுபோன்று உயிரியல் முறைகளும், வேதியியல் முறைகளை பயன்படுத்தும் போது விளை பொருளில் உருவாகும் ரசாயன பாதிப்பை தவிர்க்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.