உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்டத்தில் வெல்ல தி.மு.க., ஸ்கெட்ச்

கோவை மாவட்டத்தில் வெல்ல தி.மு.க., ஸ்கெட்ச்

கோவை: கோவை மாவட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, வாக்காளர்கள் எண்ணிக்கை அடிப்படையில், பகுதி கழகங்கள் மற்றும் வார்டுகளை தி.மு.க., பிரித்திருக்கிறது. இதற்கான பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2011 மற்றும், 2021 சட்டசபை தேர்தல்களில், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க., வெற்றி பெறவில்லை. இடைப்பட்ட, 2016 தேர்தலில் ஆறுதலாக சிங்காநல்லுாரில் மட்டும் வென்றது.அதனால், 2022 உள்ளாட்சி மற்றும், 2024 லோக்சபா தேர்தல்களில் கூடுதல் கவனம் செலுத்தி, தி.மு.க., வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பின், எம்.பி., பதவியை கைப்பற்றிய வரலாற்றை தி.மு.க., பதிவு செய்தது. இதேபோல், 2026 சட்டசபை தேர்தலில், மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தோடு, மேற்கு மண்டல பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக ஆலோசித்திருக்கிறார். இதுதொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் ஏராளமான வார்டுகளில் கிளை செயலாளர்களே இல்லை. சில வார்டுகளில், 15 ஆயிரம் வாக்காளர்கள், சில பகுதி கழகங்களுக்கு கீழ், 50 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 'மைக்ரோ' அளவில் பணிபுரிவதற்கு வசதியாக, 30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு பகுதி கழகம் என்றும், 10 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு வார்டு என்றும் பிரித்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஏற்கனவே உள்ள பகுதி கழக மற்றும், வார்டு கழக செயலாளர்கள் செயல்படுவர். சட்டசபை தேர்தலுக்காக, கூடுதலாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.கோவை தெற்கு மாவட்டத்தில், பகுதி கழகங்கள் பிரிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை குறிச்சியில், ஒரே ஒரு பகுதி கழகம் இருந்தது; எட்டு வார்டுகள் இருந்தன.குறிச்சி தெற்கு, வடக்கு, மேற்கு என மூன்று பகுதிகளாக பிரித்து, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தலா மூன்று வார்டுக்கு ஒருவர், மீதமுள்ள இரண்டு வார்டுக்கு ஒருவர் என மூன்று பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.இதேபோல், வடக்கு மாவட்டம் மற்றும் மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி கழகங்களை பிரித்து, வார்டுகளுக்கு பொறுப்பாளர்கள் பட்டியல் தயார் செய்து, கட்சி தலைமைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகுமென கூறப்பட்டுள்ளது.இச்சூழலில், லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., - பா.ஜ., பெற்ற ஓட்டுகள் விபரம் ஓட்டுச்சாவடி வாரியாக சேகரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தி.மு.க., கூட்டணி பெற்ற ஓட்டுகள், பா.ஜ., - அ.தி.மு.க., ஓட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்து, எத்தனை இடங்களில் பின்தங்கி இருக்கிறோம் என ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை