முதல்ல இதை செய்யுங்க!
சூலுார் சின்ன குளத்தை துார்வார முன்னுரிமை அதிகாரிகளிடம் விவசாயிகள் கோரிக்கைசூலுார்: சூலுாரில் உள்ள பெரிய குளத்தை தூர் வாருவதை நிறுத்தி விட்டு, சின்ன குளத்தை தான் முதலில் துார்வார முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், சுற்றுவட்டார விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், நகர தலைவர் முத்துசாமி, செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் மற்றும் நீர் வளத்துறை தலைமை பொறியாளரிடம், சூலுார் குளங்களை தூர் வாருவது குறித்து மனு அளித்தனர். சூலுார் பேரூராட்சியில் உள்ள, 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய குளம் மற்றும் சின்னக்குளம் தூர் வாரி, 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. கழிவுகள் நிரம்பியுள்ளன. இரு குளங்களை தூர் வார வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், அப்போதைய எம்.எல்.ஏ., கனகராஜ் முயற்சியில், சின்ன குளம் தூர் வாரும் பணி துவங்கியது. மழை வந்ததால், தடைபட்டது. அதன்பின்னரும், விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், தனியாரின் சமுதாய பங்களிப்பு நிதியில், பெரிய குளம் தூர் வாரும் நடவடிக்கைகள் துவங்கின. இதனால், அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது : தற்போது கோடை காலம் என்பதால், மேல் மடையில் உள்ள பெரிய குளத்தை தூர் வாரினால், சின்னக் குளம் வறண்டு போகும் அபாயம் உள்ளது. சின்னக் குளத்தில் தண்ணீர் இல்லையென்றால், சுற்று வட்டார விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படும். விவசாயம் கேள்விக்குறியாகி விடும். அதனால், பெரிய குளத்தை தூர் வாருவதை நிறுத்திவிட்டு, முழு கொள்ளளவு தண்ணீரை தேக்கி வைக்கவேண்டும். அதன்பின்னர், சின்னக் குளத்தை தூர் வாரி முடித்த பின், சின்ன குளத்துக்கு தண்ணீர் விட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகே, பெரிய குளத்தை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். தூர் வார முடியாது சூலுாரில் உள்ள இரு குளங்களை தூர் வார வேண்டும், என்பது சுற்றுவட்டார விவசாயிகளின் பல ஆண்டு கோரிக்கையாகும். எப்போது கேட்டாலும், குளங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. தண்ணீர் குறைந்தால் மட்டுமே தூர் வார முடியும், என, அதிகாரிகள் பதில் அளித்து வந்தனர். தேர்தல் நேரத்தில், பெரிய குளத்தில் உள்ள நீரை வெளியேற்றி, தூர் வாரும் பணியை துவங்கியுள்ளனர். மேலும், சின்னக் குளத்தில் இருந்து தடுப்பணைகளுக்கு தண்ணீரை விடாமல், அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு, பாசனத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது மற்ற விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தூர் வாரும் நடவடிக்கைகள் அரசின் உரிய அனுமதியுடன், தகுந்த திட்டமிடலுடன் அமைய வேண்டும், என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.