சோதனை முயற்சிக்கு இரண்டு ஆண்டு தேவையா? உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கேள்வி
- நமது நிருபர் -: ''ரேஷனில், தேங்காய் எண்ணெய் வினியோகிப்பது குறித்த சோதனை முயற்சிக்கு இரண்டு ஆண்டுகள் தேவையா?'' என, உணவுத்துறை அமைச்சருக்கு, உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு காலகட்டங்களிலும் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். ஆனால், அவற்றில் பெரும்பாலானவை, நிறைவேற்றப்படாமல் கோரிக்கையாக மட்டுமே இருந்து வருகின்றன. அவ்வகையில், ரேஷன் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என்பது, தென்னை விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாகும். குறிப்பாக, தென்னை விவசாயம் பரவலாக நடந்து வரும், கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு இது பயனளிப்பதாகும். இதன் வாயிலாக, கொப்பரை விலை சரிவடையும்போது, விவசாயிகள் பாதிப்பில் இருந்து பாதுகாக்கப்படுவதுடன், தேங்காய் எண்ணெய் வினியோகிப்பதால், ரேஷனை நம்பியுள்ள எத்தனையோ குடும்பங்களும் பயனடையும். எனவேதான், ரேஷனில் தேங்காய் எண்ணெய் வினியோகிக்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதன்படி, சோதனை முயற்சியாக, தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்ட ரேஷன் கடைகளில் மட்டும், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். அவர் கூறியே இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டன. தற்போது, ஆட்சிக் காலமும் முடிவடைய போகிறது. ஒரு சோதனை முயற்சியை மேற்கொள்ள இரண்டு ஆண்டுகள் தேவையா? இது விவசாயிகளின் கோரிக்கையை புறக்கணிப்பதாகவே கருதுகிறோம். ஒட்டுமொத்த தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரேஷன் கடைகளில், தேங்காய் எண்ணெய் வினியோகிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.