உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை தானே என அலட்சியம் வேண்டாம்! கிராமத்தில் விழிப்புணர்வு 

குப்பை தானே என அலட்சியம் வேண்டாம்! கிராமத்தில் விழிப்புணர்வு 

பொள்ளாச்சி; குடியிருப்பு வீடுகளில் சேகரமாகும் குப்பையை தரம் பிரித்து அளிக்க செய்யும் வகையில், ராசக்காபாளையத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள்தோறும், திடக்கழிவுகளை அப்புறப்படுத்த நிர்வாக கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தெருக்கள், கடைவீதிகள் என எந்தவொரு பகுதிகளிலும் குப்பை கொட்டக் கூடாது. தனி நபர் குடியிருப்புகளுக்கு, சொத்து வரிக்கு ஏற்றாற்போல், ஆண்டுக்கு, சேவை வரியும் வசூலிக்கப்படுகிறது. இதனால், கிராமங்கள்தோறும் உள்ள குடியிருப்புவாசிகள் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்த்து, அவைகளை தரம் பிரித்து அளிக்க பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராசக்கபாளையம் கிராமத்தில், துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், 'துாய்மை தெரு வீரர்கள்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கண்காணிப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமையில், பி.டி.ஓ., சதீஷ் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் வீடுதோறும் நேரடியாகச் சென்று, குப்பையை தரம் பிரித்து அளிக்க அறிவுறுத்தப்பட்டது. வாகன ஒலிப்பெருக்கியில் பாடல் வாயிலாக குப்பையை தரம் பிரித்து அளிப்பதும், அவற்றை மறுசுழற்சி மற்றும் மட்கச் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து குப்பை கொட்டும் இடங்கள் கண்டறியப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பள்ளி, அங்கன்வாடிகளில் உள்ள கழிப்பறைகளின் சுத்தம் உறுதி செய்யப்பட்டது. துணை பி.டி.ஓ.,க்கள் சந்திரசேகர், மைதிலி, வனிதா, வினோத்குமார், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் கவிதா, ஊராட்சி செயலர் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ