உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புறநகர் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தப்பு நடந்துடக் கூடாது!கண்டுகொள்ளாத இடங்களிலும் பார்வை

புறநகர் பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு தப்பு நடந்துடக் கூடாது!கண்டுகொள்ளாத இடங்களிலும் பார்வை

பெ.நா.பாளையம்: கோவை ஏர்போர்ட் அருகே நடந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து, புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். கோவை விமான நிலையம் அருகே, காரில் நண்பருடன் இருந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மூவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதுதொடர்பாக, எதிர்க்கட்சிகள், தமிழக அரசை குற்றம் சாட்டி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றன. குற்றச்செயலில் ஈடுபடும் நபர்களுக்கு போலீசாரின் மீதும், சட்டத்தின் மீதும் அச்சமில்லை எனவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை இல்லாததால், குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன எனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதை தொடர்ந்து, கோவை புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் ரோந்து பணியை போலீசார் அதிகப்படுத்தி உள்ளனர். இதற்காக சிறப்பு கூட்டங்கள் நடத்தி, போலீசாருக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதில், 'பொது இடங்களில் மது அருந்துவதை போலீசார் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க கூடாது. ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் உட்பட்ட பகுதியில், எந்தெந்த பொது இடங்களில் அதிகளவு சட்டவிரோதமாக மது அருந்தும் பழக்கம் உள்ளது என கண்டறிய வேண்டும். அந்த இடங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து தினசரி பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறித்து விபரங்களை போலீசார் பதிவு செய்ய வேண்டும். தவிர, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், காதல் ஜோடிகள் அமர்ந்து பேசும் மறைவான இடங்கள், அவர்கள் வாகனங்களில் சுற்றும் இடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து, அசாதாரண சூழலில் அவர்கள் இருந்தால், விசாரித்து உரிய அறிவுரை வழங்க வேண்டும். பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் தெக்குப்பாளையம், சாமநாயக்கன்பாளையம், இடிகரை, செல்வபுரம் உட்பட பகுதிகளில் தினமும் இரவு 7:00 மணி முதல், 10:00 மணி வரை தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். இரவு, 10:00 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையும், அதிகாலை 4:00 மணி வரை ஆட்களின் நடமாட்டம் குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அதிகாலை 4:00 மணிக்கு பின் நடைப்பயிற்சி செல்லும் பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தடாகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட ஆனைகட்டி, மாங்கரை, ஆலமரமேடு, கொண்டனுார் உட்பட பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகள் செல்லும் வழியில் சனி, ஞாயிறுகளில் காதல் ஜோடிகளின் நடமாட்டம், பகல், இரவு நேரங்களில் அதிகளவு இருக்கும். அப்பகுதிகளையும் கண்காணிக்க வேண்டும் எனவும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ