குடிநீர் தொட்டி துாய்மை பணி; அதிகாரிகள் உறுதி செய்யணும்
பொள்ளாச்சி; ஊராட்சிகளில், குடிநீர் மேல்நிலைத்தொட்டிகள், முறையாகச் சுத்தம் செய்யப்படுவதை, ஒன்றிய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 65 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில், மேல்நிலை, தரைமட்ட தொட்டி என, நுாற்றுக்கணக்கான நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டு, மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால், சில ஊராட்சிகளில், மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதில்லை என, புகார் எழுகிறது. இதனால், ஒன்றிய அதிகாரிகள், மேல்நிலைத்தொட்டிகளின் பராமரிப்பு குறித்து ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.தன்னார்வலர்கள் கூறியதாவது:மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர், நிரம்பி வழியும் குழாய், தொட்டியை சுத்தம் செய்யும் போது, கழிவுநீர் வெளியேறும் குழாய், தரைமட்டத்தில், 4 அடி உயரத்தில் இருக்க வேண்டும்.இதேபோல், தொட்டிகளை, 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, நன்கு உலரவைத்து, தண்ணீர் நிரப்ப வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. ஆனால், சில ஊராட்சிகளில் பெயரளவில் மட்டுமே தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்படுகிறது.ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்த நாள் குறித்த விபரம், தொட்டிகளில் குறிப்பிடுவதும் கிடையாது. ஊராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.அப்போது தான், குடிநீர் தொட்டி எப்போது சுத்தம் செய்யப்பட்டது என்பதை மக்களும் தெரிந்து கொள்ள முடியும். அதில், தவறு இருந்தால் உயர் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட முடியும்.இவ்வாறு, கூறினர்.