குப்பைக்கு தீ வைத்ததால் வாகன ஓட்டுநர்கள் அவதி
நெகமம்; நெகமம், சேரிபாளையத்தில் ரோட்டோரத்தில் குப்பைக்கு தீ வைப்பதால், அப்பகுதியில் புகை சூழ்ந்து வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். வடசித்தூர் --- நெகமம் வழித்தடத்தில், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. இதில், சேரிபாளையம் பகுதியில், ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டு தீ வைத்ததால், அப்பகுதி பிராதன ரோடு மற்றும் குடியிருப்பு பகுதி முழுதும் புகை சூழ்ந்து விடுகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர். நடந்து செல்ல முடியாமல் மக்கள் திணறுகின்றனர். இதனால், அப்பகுதியில் வசிக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள், சுவாச கோளாறு உள்ளிட்ட உடல் உபாதைகள் உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது போன்று பல கிராமங்களில் குப்பையை முறையாக அகற்றாமல் தீ வைப்பதால் பொதுச்சுகாதாரமும் பாதிக்கிறது. எனவே, குப்பை கொட்டுவதற்கு கிராமத்தின் எல்லையில் இடம் ஒதுக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.