குப்பையை எரிப்பதால் வாகன ஓட்டுநர்கள் அவதி
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு அருகே, வடசித்தூர் செல்லும் வழித்தடத்தில், காலை மற்றும் மாலை நேரத்தில் அதிக வாகன போக்குவரத்து இருக்கிறது. இதில், கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் அருகே ரோட்டின் ஓரத்தில், அடிக்கடி குப்பை குவிப்பது வாடிக்கையாகி விட்டது.மேலும், இவ்வழித்தடத்தில் செல்பவர்கள் சிலர், குப்பையை இங்கு வீசிச் செல்வதும் வழக்கம். இதனால், இங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், துர்நாற்றம் வீசுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைக்கு அடிக்கடி தீ வைத்தும் எரிக்கப்படுகிறது. இதனால், ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.குப்பை கொட்டப்பட்ட இடத்தைச் சுற்றிலும் விளைநிலம் அதிகம் இருப்பதால், பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், குப்பை கொட்டும் இடத்தை மாற்றம் செய்யவோ அல்லது இங்கு குப்பை தொட்டி அமைத்து, முறையாக குப்பை அகற்றவோ நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.