மழை பொழிவு குறைந்ததால் வறட்சி நிலை! வட கிழக்கு பருவம் கைகொடுக்குமா
உடுமலை : உடுமலை பகுதிகளில், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக ஏமாற்றி வருவதால், வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, வாழை, நெல், கரும்பு, மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என, 2.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை பொழிவு, 618.2 மி.மீ., ஆகும். கடந்தாண்டு, பருவமழைகள் இயல்பை விட குறைந்தது. கோடை மழையும், குளிர் கால மழையும் ஏமாற்றியது.தென்மேற்கு பருவமழை துவக்கத்தில் சிறப்பாக பெய்த நிலையில், அடுத்தடுத்த மாதங்களில் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.கடந்த, 9 மாதங்களில் பெய்ய வேண்டிய சராசரி மழையளவு, 303.9 மி.மீ., ஆகும். ஆனால், நடப்பாண்டு, 145.75 மி.மீ., மட்டுமே மழை பெய்துள்ளது. வழக்கமாக கிடைக்க வேண்டிய, மழையளவில், 158.15 மி.மீ., மழை குறைவாக கிடைத்துள்ளதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.ஆனால், உடுமலை பகுதிகளில் ஓரளவு மழை பெய்தாலும், கடந்த ஒரு மாதமாக மழை பெய்யாததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஆண்டு சராசரி மழை பொழிவில், ஜன., - பிப்., மாத குளிர் கால மழையளவு சராசரி, 14 மி.மீ., ஆக உள்ளது. நடப்பாண்டு, ஜன.,யில், 34.4 மி.மீ., மழை பெய்தது. மார்ச் முதல் மே வரையிலான கோடை கால மழை சராசரியளவு, 135.1 மி.மீ.,ஆகும். நடப்பாண்டு, மார்ச், ஏப்.,மாதங்களில் போதிய மழை பெய்யவில்லை. மே மாதம், 7 மழை நாட்களில், 134 மி.மீ., மழை பெய்தது.அடுத்து, ஜூன் முதல் செப்.,வரையிலான தென்மேற்கு பருவமழை, சராசரியளவு, 154.8 ஆகும். இதில், ஜூனில், 4 மழை நாட்களில், 18.1 மி.மீ., ஜூலையில், 11 மழை நாட்களில், 65.5 மி.மீ., மழை பெய்தது.ஆக., ல், 6 மழை நாட்களில், 76.7 மி.மீ., மழை பெய்துள்ளது. நடப்பு செப்., மாதத்தில் மழை பெய்யாமல், கடும் வறட்சியும், வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால், பாசன பகுதிகளில் கடும் வறட்சி நிலை காணப்படுகிறது.வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோடை கால மழை மற்றும் தென்மேற்கு பருவமழை சிறப்பாக பெய்ததால், பாசன ஆதாரமாக உள்ள, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள், அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து நிரம்பின.இதனால், பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு, சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு மாதமாக, மழைப்பொழிவு இல்லாததோடு, வெயிலின் தாக்கமும் அதிகரித்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பான மழை பொழிவில் பெருமளவு குறைந்துள்ளது.அடுத்து துவங்க உள்ள வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது. ஆண்டு சராசரி மழை பொழிவில், வடகிழக்கு பருவமழையின் பங்கு அதிகமாகும்.திருப்பூர் மாவட்டத்திற்கு, சராசரியாக, 314.3 மி.மீ., உள்ளது. இதனால், வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு, கூறினர்.