தொடக்க பள்ளி ஆசிரியர்கள் சுறுசுறுப்பு; அங்கன்வாடி மையங்கள் பிசுபிசுப்பு
அன்னுார்; அரசு துவக்க பள்ளிகளில் விதி மீறி ஜனவரி மாதமே மாணவர் சேர்க்கப்படுவதால் அங்கன்வாடி மையங்கள் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.அன்னுார் வட்டாரத்தில்,75 துவக்க பள்ளிகள் உள்ளன. அங்கன்வாடி மையங்கள், 21 ஊராட்சி மற்றும் பேரூராட்சியில் செயல்பட்டு வருகின்றன.அங்கன்வாடி மையங்களில் இரண்டரை வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கி கல்வி கற்பித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கன்வாடி மையங்களில் கடந்த மாதம் முதல் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறுகையில், 'அரசு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஜூன் மாதம் நடத்த வேண்டிய மாணவர் சேர்க்கையை, ஜனவரி மாதமே துவக்கி விட்டனர். மாணவர்கள், தனியார் பள்ளி அல்லது அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு செல்லாமல் தடுப்பதற்கு ஜனவரி மாதமே குழந்தைகளை தங்களுடைய பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஆனால் மாணவர் சேர்க்கை செய்வதில்லை. வருகை பதிவேட்டில் பதிவு செய்வதில்லை. ஆனால், வகுப்பறையில் அமர்த்திவிடுகின்றனர்.இதனால் அங்கன்வாடி மையங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. விதிமீறி செயல்படும் துவக்க பள்ளிகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.இது குறித்து பெற்றோர் கூறுகையில், 'அன்னுார் வட்டாரத்தில் வடவள்ளி ஊராட்சியில் ஒரு துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை இல்லாமல் மூடி கிடக்கிறது. மூன்று துவக்க பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். எனவே மாணவர் சேர்க்கையை வேகப்படுத்த பள்ளி நிர்வாகங்கள் இது போல் செயல்படுகின்றன,'' என்றனர்.