| ADDED : நவ 24, 2025 06:01 AM
வால்பாறை: வால்பாறையில், ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் புதிய பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகளவில் உள்ளன. மேலும், ரோட்டில் சுற்றுலா வாகனங்களும் அதிகளவில் நிறுத்தப்படுவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்கள் நிம்மதியாக நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும், வால்பாறை நகரில் தான், அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. இதனால் பல்வேறு எஸ்டேட் பகுதியில் இருந்தும் வால்பாறைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ரோட்டை ஆக்கிமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும். இதே போன்று, வால்பாறை மார்க்கெட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும். இவ்வாறு, கூறினர்.