லிப்ட பொருத்தும் பணியில் இன்ஜி., உடல் நசுங்கி சாவு
கோவை: லிப்ட்டில் சிக்கி இன்ஜினியர் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கோவை மாவட்டம், செல்வபுரம், ரங்கப்பா லே அவுட்டில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவர் வீட்டில், லிப்ட் கதவில் புதிய கண்ணாடி பதிக்கும் பணி நடந்தது. எல்.ஜி.பி., லிப்ட் ஒயர் ஒர்க் நிறுவன சர்வீஸ் இன்ஜினீயர், பீளமேடு, சேரன் நகரை சேர்ந்த ரகு, 39, சூப்பர்வைசர் சிந்துபாரதி, ஆனந்த் ஆகியோர், கண்ணாடி பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். மின்சாரத்தை துண்டித்து, முதல் தளத்தில் லிப்ட்டை நிறுத்திவிட்டு, தரை தளத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, முதல் தளத்திலிருந்து எதிர்பாராதவிதமாக லிப்ட் கீழே இறங்கியது. இதை பார்த்ததும் சிந்துபாரதி, ஆனந்த் வெளியே ஓடினர். லிப்ட் அமுக்கியதில், ரகு படுகாயமடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வபுரம் போலீசார் விசாரித்து சிந்துபாரதி, ஆனந்த், வெங்கடேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.