உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

சாதனை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

பொள்ளாச்சி, : மாநில அளவிலான கலைத் திருவிழாவில், மூன்று பரிசுகளை வென்றமாணவர்களுக்கு, மாலை அணிவித்து மேள தாளத்துடன் வரவேற்பு கொடுத்து கிராம மக்கள் அசத்தினர்.பொள்ளாச்சி அருகே, ஆலாங்கடவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், மாறுவேடம், கிராமிய நடனத்தில், அசத்தினர். இவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.மாநில அளவிலான போட்டியில், மாணவர் சிவவிஷ்ணு மாறுவேட போட்டியிலும், கிராமிய நடனத்தில், 'அமேசிங் ஆலாங்கடவு டீம்' என்ற பெயரில் பங்கேற்ற பள்ளியை சேர்ந்த ஒன்பது மாணவர்களும் முதலிடம் பெற்று பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்தனர்.அதே போன்று, இதே ஊரைச்சேர்ந்த பள்ளியின் முன்னாள் மாணவியும், ஆனைமலை வி.ஆர்.டி., பள்ளியை சேர்ந்த சம்யுக்தா, கிராமிய நடனம் தனி போட்டியில் முதலிடம் பெற்றார்.ஒரே பள்ளியில் மூன்று மாணவியர் முதலிடம் பெற்று ஊருக்கு பெருமை சேர்த்ததால், ஆலாங்கடவு, பூச்சனாரி கிராம மக்கள், மாணவர்களை உற்சாகமாக வரவேற்றனர்.ஊர் எல்லையில் அவர்களை வரவேற்ற மக்கள், பட்டாசு வெடித்தும் மாலை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மாணவர்களை மேளதாளத்துடன்ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்துச்சென்றனர்.பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி, உதவி ஆசிரியர் சிவராம் ஆனந்த் ஆகியோருக்கு மாலை அணிவித்து, பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மற்ற பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.வெற்றி பெற்ற மாணவர்களை, வட்டார கல்வி அலுவலர்கள் சின்னப்பராஜ், செல்வமணி மற்றும் வட்டார வளர்ச்சி பயிற்றுநர் விசாலாட்சி ஆகியோர் பாராட்டினர்.பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த கலைத்திருவிழாவில், 38 மாவட்டங்களில், ஒரு லட்சத்து, 47 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர்.அதில், வட்டார, மாவட்ட அளவில் வென்று, மாநில அளவில் மூன்று போட்டிகளில் முதலிடம் பெற்று ஊருக்கும், பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர்.வெற்றி பெற்றவர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி, பரிசுகளை வழங்கினார். கிராமத்தில் உள்ள துவக்கப்பள்ளி மாணவர்கள், சாதனை செய்ததை கிராம மக்கள் கொண்டாடும் வகையில், உற்சாக வரவேற்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு, கூறினர்.மாணவர்கள் கூறுகையில், 'பல மாவட்டங்களில் இருந்து வந்தனர். வெற்றி பெறுவோமா என்ற சந்தேகம் இருந்தாலும், முழு திறமையை வெளிப்படுத்தினால், வெற்றி என்ற எண்ணத்தை மட்டும் மனதில் வைத்தோம். வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கிராம மக்கள் அன்போடு வரவேற்றது நெகிழ்ச்சியாக உள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை