சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கு
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்ட ரோட்டரி சங்கம், காரமடை ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ரோட்டரி சங்கத்தின் சுற்றுச்சூழல் பிரிவு ஆலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் மியாவாக்கி வளாகத்தில் நடந்தது. காரமடை ரோட்டரி சங்க தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். ஆளுநர் சுரேஷ் பாபு, சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் மீனாட்சி வெங்கட்ராமன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் தலைவர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் கடும் பாதிப்பை அடைந்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த ரோட்டரி சங்கத்தின் வாயிலாக ஏற்படுத்த வேண்டிய பங்குகள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலை பேணிப் பாதுகாக்க மரம் நடும் திட்டத்தை ஊக்குவிக்கவும், செயல்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. வரும் ஆண்டில் மேட்டுப்பாளையம் அவிநாசி நான்கு வழி சாலைக்கு ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ள நிலையில், அதற்கு மாற்றாக மூன்று மடங்கான மரங்கள் நடவு செய்ய மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், அதனை ரோட்டரி சங்கத்தின் சுற்றுச்சூழல் பிரிவும் இணைந்து மரங்களை வளர்க்க தேவையான உதவிகளை செய்து மரங்களை பராமரிப்பது போன்றவற்றை தங்களையும் இணைத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ், வனக்கல்லுாரி முன்னாள் முதல்வர் பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.----