| ADDED : செப் 13, 2026 04:11 PM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், பஸ் வரும் நேரம் குறித்த பெயர் பலகையால் பயணியர் குழப்பம் அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, பல்வேறு கிராமங்களுக்கு மக்கள் பஸ் பயணம் செய்கின்றனர். புது பஸ் ஸ்டாண்டில் கிராமப் பகுதிகளுக்கு செல்லும் பஸ் மற்றும் அதன் நேரம் குறித்த அறிவிப்பு பலகை இல்லாததால் பயணியர் குழப்பம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, சில நாட்களுக்கு முன், பஸ் ஸ்டாண்டில் பஸ் இயக்க நேரம் குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. அதில், பல தவறுகள் உள்ளது. குறிப்பாக, பஸ் வரும் நேரம், ரயில்வே நேரமாக குறிப்பிட்டு இருப்பதால் பயணியர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. மேலும், பஸ் எண் குறிப்பிடாமல், நேரம் மட்டுமே உள்ளது. இது மட்டுமின்றி அறிவிப்பு பலகையில், கோதவாடி செல்ல 26:20 என நேரம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி, பஸ் வரும் நேரம், வழித்தடம் உள்ளிட்ட விபரங்களை தவறு இன்றி, அனைவருக்கும் புரியும் வகையில் அறிவிப்பு பலகையை மாற்றியமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.