உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பட சரியான புத்தகங்கள் வழங்க எதிர்பார்ப்பு

மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பட சரியான புத்தகங்கள் வழங்க எதிர்பார்ப்பு

கோவை; கோவையில், அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் மேம்பட வழங்கப்பட்ட வாசிப்பு இயக்க புத்தகங்களை, ஆசிரியர்கள் சரியான வழிகாட்டுதலுடன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் சிந்தனை மற்றும் வாசிப்பு திறனை அதிகரிக்க பல்வேறு வகைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 'நுழை, நட, ஓடு, பற' என, நான்கு நிலைகளில் வாசிப்பு இயக்க கதை புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, 81 தலைப்புகளில், 51 தமிழ் வழி புத்தகங்கள், 30 ஆங்கில மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை நகரம், பேரூர், சூலுார், பி.என்.பாளையம் உள்ளிட்ட 15 வட்டாரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 5,45,958 புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாணவர்களின் வாசிப்பு திறனுக்கு ஏற்ப மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம் என புத்தகங்கள் வண்ணக் குறியீடுகளுடன் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பல பள்ளிகளில் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கும் முறை, சரியாக பின்பற்றப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து, அதற்கேற்ற வண்ணக் குறியீடு உள்ள புத்தகங்களை ஆசிரியர்கள் வழங்க வேண்டும். சில ஆசிரியர்கள் தங்களுக்கு புத்தகங்கள் மாற்றி அனுப்பப்பட்டு விட்டதாகக் கூறி, மாணவர்களின் திறனுக்கேற்ற புத்தகங்களை வழங்குவதில்லை என கூறப்படுகிறது. சூலுார் போன்ற சில வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு, மிக குறைவான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'இத்திட்டத்தை செயல்படுத்த, வாசிப்பு இயக்க வழிகாட்டி புத்தகம் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் முழுமையாகப் படித்தால், மாணவர்களின் வாசிப்பு திறனுக்கு ஏற்ப, எந்தெந்த புத்தகங்களை வழங்கலாம் என்பது குறித்த தெளிவான புரிதல் ஏற்படும். மாணவர்களின் திறனை வளர்க்கும் நோக்கில் வழங்கப்படும் இப்புத்தகங்கள், முறையாக மாணவர்களுக்கு வழங்கினால் மட்டுமே முழு பயன் கிடைக்கும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி