உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளிகளில் கட்டாயமாக்க எதிர்பார்ப்பு

மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளிகளில் கட்டாயமாக்க எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி,; அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, முதன்மை விளையாட்டுகளில் ஒன்றை, கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் பள்ளி கல்வித்துறையால் நடத்தப்படுகின்றன. இப்போட்டியானது, 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவுகளாக, குறுமையம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன.அவ்வகையில், ஜூலை மாதத்தில் இருந்து, போட்டிகள் துவங்க, ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அந்த வரிசையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, முதன்மை விளையாட்டுகளில் ஒன்றை கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கல்வியாளர்கள் கூறியதாவது:அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள விளையாட்டு மைதானங்கள், போதிய பராமரிப்பின்றி உள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தலைமையாசிரியர், உடற்கல்வி ஆசிரியர்களை கொண்ட, பள்ளி விளையாட்டு குழு உருவாக்கி, மாணவர்களை அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க செய்ய வேண்டும்.குறிப்பாக, திறன் வாய்ந்த மாணவர்களை கண்டறிந்து, முதன்மை விளையாட்டுகளில் ஒன்றை அவர்களுக்கு கட்டாயம் பயிற்சியளிக்க வேண்டும். மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பரிசு பெற ஊக்கப்படுத்த வேண்டும்.அதேபோல, போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, தனியார் பங்களிப்புடன் தேவையான விளையாட்டு சீருடைகள், உபகரணங்கள் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போது மட்டுமே, விளையாட்டில் திறன் வாய்ந்த அரசு பள்ளி மாணவர்கள் வெற்றி வாகைசூடுவர்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !