பனி விழும் டிசம்பர் மாதம் வேண்டும் கூடுதல் கவனம்!
பனிக்காலங்களில் குழந்தைகளுக்கு, நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என, குழந்தைகள் நல மருத்துவர் ஜோதிலட்சுமி அறிவுறுத்தியுள்ளார்.கோவையில் கடந்த சில தினங்களாக, காலை, மாலை நேரங்களில் பனி அதிகளவில் காணப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.குழந்தைகள் நல மருத்துவர் ஜோதிலட்சுமி கூறியதாவது:பனி காலங்களில் பொதுவாகவே சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கலாம். பள்ளிகளில் குழந்தைகள் அருகருகே அமர்வதால், எளிதாக மற்ற குழந்தைகளுக்கு பரவும்.எனவே, சளி, இருமல், காய்ச்சல் பாதிப்பு உள்ள குழந்தைகளை மூன்று, நான்கு நாட்கள் அனுப்பாமல்இருப்பது நல்லது. இதனால் பிற குழந்தைகளுக்கு தொற்று ஏற்படாது.பனி நேரங்களில் வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம். சுடு தண்ணீர், சூடான உணவு கொடுக்கலாம். ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் வர வாய்ப்புண்டு.ரெகுலராக பாதிப்பு உள்ளவர்கள், இந்த மூன்று மாதங்களுக்கு தடுப்பு மருந்துகளை, மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக்கொள்ளலாம். அதிக காய்ச்சல், மூச்சு விட சிரமம், உணவு அதிகம் எடுத்துக்கொள்ளாமை, சோர்வு இருந்தால் மருத்துவரை பார்த்து விட வேண்டும்.குழந்தைகளின் எடை, வயதுக்கு ஏற்ப மட்டுமே மருந்துகளின் டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது. கடந்த முறை கொடுத்த மருந்தையே வாங்கி கொடுப்பது, அந்த அளவை மீண்டும் தொடர்வது, முற்றிலும் தவறு.குழந்தைகளுக்கான காய்ச்சல் மருந்து, பரிந்துரைக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகம் எடுத்துக்கொண்டால், லிவர் பாதிப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.நான்கு அல்லது ஆறு மணி நேரம் என்றால், சரியாக அந்த இடைவெளியில் தான் மருந்து கொடுக்க வேண்டும்; காய்ச்சல் அதிகம் உள்ளது என, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுப்பது, தாமாக மருந்துகள் வாங்கிக்கொடுப்பது கூடவே கூடாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.