வாடகைக்கு இருந்த பெண்ணை வெட்டி கொன்ற விவசாயி கைது
சூலுார்:கோவை மாவட்டம், சூலுார் பீடம்பள்ளி, கள்ளித்தோட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 45; விவசாயியான இவர் திருமணம் ஆகாதவர். தோட்டத்தில் தனியாக வசித்தார். தோட்டத்தில் உள்ள கொட்டகையை, கோவை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரம்யா, 34, என்ற பெண்ணுக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். ரம்யா இரு மாதங்களாக கொட்டகையில் நாய்களை வளர்த்து வந்துள்ளார். முன்பணமும், வாடகையும் தரவில்லை. ரம்யாவை பார்க்க சிலர் அடிக்கடி அங்கு வந்து செல்வது ராஜேந்திரனுக்கு பிடிக்கவில்லை. இடத்தை காலி செய்ய கூறியதற்கு, ரம்யா மறுத்துள்ளார். ரம்யா மீது ராஜேந்திரன், போலீசில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ரம்யாவிடம் இடத்தை காலி செய்ய கூறியபோது ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன், அரிவாளாள் ரம்யாவின் கழுத்தில் வெட்டினார். அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரிவாளுடன் சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் ராஜேந்திரன் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.