உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலி விஷயத்தில் வனத்துறை அறிவுரையால் கிலி! பொருளாதார சிக்கலால் மறுக்கும் விவசாயிகள்

வேலி விஷயத்தில் வனத்துறை அறிவுரையால் கிலி! பொருளாதார சிக்கலால் மறுக்கும் விவசாயிகள்

பெ.நா.பாளையம்: கோவை புறநகர் வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சின்னதடாகம், வீரபாண்டி, சோமையனுார், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, பாப்பநாயக்கன்பாளையம், மடத்தூர், வரப்பாளையம் உட்பட மலையோர கிராமங்களில், இரவில், வனவிலங்குகள் தொல்லை அதிகரிக்கிறது. வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும், வன விலங்குகளால் பயிர் சேதங்கள் ஏற்படுவதை முழுமையாக தடுக்க இயலவில்லை. தடாகம் வட்டார விவசாயிகள், வனவிலங்குகளிடமிருந்து பயிர்களை காப்பாற்ற, தங்களுடைய வேளாண் நிலங்களை சுற்றிலும் சோலார் அல்லது பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். மின் வேலிகளால் மனித மற்றும் வன விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, தமிழ்நாடு வனத்துறை சார்பில், சின்னதடாகம் வட்டார விவசாயிகளுக்கு, நோட்டீஸ் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், 'தங்களது விவசாய நிலத்தில், தமிழ்நாடு மின்வேலி பதிவு மற்றும் வரன்முறை படுத்துதல் விதிகளின்படி அறிவுறுத்தப்பட்டுள்ள அனைத்து தொழில்நுட்ப வழிகாட்டுதலின்படி, மின்வேலி அமைக்கப்படாதது தெரியவருகிறது. எனவே, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை கடைபிடித்து, மின்வேலி அமைக்க விண்ணப்பிக்குமாறு இதன் வாயிலாக அறிவுறுத்தப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, சாதி, மத, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளர் பிரபு கூறியதாவது: பொருளாதார நிலைக்கு ஏற்ப, விளை நிலங்களை சுற்றியும், ஏக்கர் ஒன்றுக்கு, குறைந்தபட்சம் ஒரு லட்சம் மதிப்பில் விவசாயிகள் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். தற்போதைய அறிவுறுத்தல், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி செயல்படுத்தினால், ஏக்கர் ஒன்றுக்கு, மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும்; பராமரிப்பு செலவும் அதிகம். இப்படி அமைத்து வனவிலங்குகள் சேதப்படுத்தினால், அதற்கான நஷ்டஈடு வனத்துறை அளிக்குமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இச்சிக்கலில் இருந்து விவசாயிகள் விடுபட, சின்னதடாகம், பெரியநாயக்கன்பாளையம் வட்டார விவசாயிகளுக்கு, வனத்துறை, அரசு தொழில்நுட்ப விதிகளின்படி, மின்வேலி இலவசமாக அமைத்து, பராமரிப்பு செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் விவசாயிகள் வழங்க தயாராக உள்ளனர். வன எல்லை பகுதிகளிலேயே மின்வேலி அமைத்து, அதை வனத்துறையினரே பராமரித்தால் இன்னும் சிறப்பு. இவ்வாறு, அவர் கூறினார்.வனத்துறையினர் கூறுகையில், 'தரமான மின்வேலி அமைப்பதால், வனவிலங்கு மற்றும் மனித உயிர் சேதம் தவிர்க்கலாம். அதற்காகவே விவசாயிகளுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை