பட்டுக்கூடுக்கு நல்ல விலை: விவசாயிகள் மகிழ்ச்சி
கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் பட்டு வளர்ச்சித்துறை பட்டுக்கூடு விற்பனை அங்காடியில், கோவை, திருப்பூர், ஈரோடு, கோபி, உடுமலை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். மாதம், 20 முதல் 25 டன்கள் வரை பட்டுக்கூடு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில், தரமான பட்டுக்கூடு ஒரு கிலோ, 657 ரூபாய்க்கும், அடுத்த தரம் 555 ரூபாய்க்கும் விற்பனையானது. பட்டு நுால் ஒரு கிலோ, 4,646 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது குறித்து, பட்டு அங்காடி அதிகாரிகள் கூறுகையில், ''மழைக்காலம் முடிந்து இனி பனிக்காலம் துவங்கி விடும். அதனால் பட்டுக்கூடு உற்பத்தியில் பாதிப்பு இருக்காது. இந்த விலை குறைய வாய்ப்பு இல்லை. மழைக்காலத்திலும் பட்டுக்கூடுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியாக உள்ளனர்,'' என்றனர்.