நத்தம் பட்டாவில் விதிவிலக்கு; விவசாயிகள் வேண்டுகோள்
கோவை; 'தமிழக அரசும், வருவாய்த்துறையும் பொதுமக்கள் நலன் கருதி, விதிமுறைகளை தளர்த்தி, நத்தம் பட்டா வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இச்சங்க நிர்வாகிகள் பழனிசாமி, பெரியசாமி உள்ளிட்டோர், கலெக்டரிடம் கொடுத்த மனு: கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் நத்தம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தமிழக அரசு 1997, 2005 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு அரசாணைகளை பிறப்பித்தது. அதன்படி, நத்தம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு, ஆவணங்கள் அடிப்படையில் நத்தம் பட்டா வழங்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்காமல், சென்னையில் உள்ள நில நிர்வாக ஆணையருக்கு கோப்புகளை பரிந்துரைத்து அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். பல ஆண்டுகளாக குடியிருந்த வீடுகளில் பல சிதிலமடைந்து தரைமட்டமாகிப் போயின. அந்த இடம் சுவாதீனத்தில் இருந்தாலும், அவ்வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு, வீட்டு வரி, சொத்து வரி உள்ளிட்டவை இருந்தாலும், அந்த இடத்துக்கு பட்டா வழங்குவதில்லை. 1997ல் அரசு நடத்திய செட்டில்மென்ட் கணக்கெடுப்பின்போது, பலரது வீடுகள் சிதிலமடைந்து தரைமட்டமாகியிருந்தன. அவ்விடங்கள், அரசுக்கு சொந்தமான இடம் என, வருவாய்த்துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிலரது வீடுகளுக்கு முன்பு காலி இடம் சுவாதீனத்தில் இருந்தாலும் பட்டா வழங்க இயலாது என வருவாய் தரப்பு கூறுகிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையீடு செய்து சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.