உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வன விலங்கு ஊடுருவும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கோங்க வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

வன விலங்கு ஊடுருவும் நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கோங்க வனத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

கோவை: வன விலங்குகள் ஊடுருவலைத் தடுக்க முடியாத பகுதிகளில், வேளாண் நிலத்தை, வனத்துறையினர் குத்தகைக்கு எடுத்துக் கொள்ளும் திட்டத்தைப் பரிசீலிக்க வேண்டும் என, குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தனர்.விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள்:நில அளவை செய்யும் அதிகாரிகள், வாய்மொழியாக தகவல் தருகின்றனர். நிலம் அளந்ததற்கான அத்தாட்சி தருவதில்லை. டிஜிட்டல் சர்வே ஆவணத்தில், போதிய விவரங்கள் குறிப்பிடப்படுவதில்லை.வனத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், வெளி மாநிலங்களில் உள்ளது போல் தண்டவாள வேலி அமைக்க வேண்டும். சாகுபடி செய்த நிலங்களுக்குள் வன விலங்குகள் நுழைவதைத் தடுக்க இயலாத சூழலில் விவசாய நிலங்களை, வனத்துறையே குத்தகைக்கு எடுத்துக் கொள்ளலாம். இதனால், விவசாயிகள் பயிர் செய்யாவிட்டாலும் ஆண்டுதோறும் குறிப்பிட்ட வருவாயைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திட்டம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.பொள்ளாச்சி மீன்கரை ரோட்டில் வேளாண் பொறியியல் துறை கிடங்கு அருகே, தோட்டக்கலைத்துறை பண்ணை அமைக்க வேண்டும். மழை நன்றாக பெய்துள்ள நிலையில் தடுப்பணைகளைத் தூர்வார வேண்டும்.ஆனைமலை பகுதியில் தென்னை வாடல் நோய்க்கு நிவாரணம் கிடைக்காத விவசாயிகளுக்கு, உடனே வழங்க வேண்டும்.காரமடையில், வார்ப்பட தொழிற்சாலைக் கழிவுகள் தனியார் விவசாய நிலத்தில் கொட்டப்படுகின்றன. சம்பந்தப்பட்ட விவசாயிகள் மீது, வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். கூட்டத்தில் பல்வேறு துறைசார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி