பூண்டு விலை குறைவால் விவசாயிகள் அதிர்ச்சி
மேட்டுப்பாளையம்; வெள்ளைப் பூண்டு ஒரு கிலோ,110 ரூபாயாக விலை குறைந்ததால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் ஆகிய பகுதிகளில், வெள்ளைப் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பூண்டு நடவு செய்த, ஐந்து மாதத்திற்கு பிறகு அறுவடை நடைபெறும். ஒரு ஏக்கருக்கு, 900 முதல், ஆயிரம் கிலோ வரை விதைப்பூண்டு நடவு செய்யப்படும். நடவு செய்தது முதல், களை எடுத்தல், மருந்து அடித்தல், அறுவடை முடிந்து, மூட்டைகளில் பிடித்து, விற்பனைக்கு கொண்டு வரும் வரை, ஒரு ஏக்கருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். நன்கு விளைந்தால், ஒரு ஏக்கருக்கு, 10 டன் வரை மகசூல் கிடைக்கும். தற்போது பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. இந்த பூண்டுகள் அனைத்தும், மேட்டுப்பாளையத்தில் உள்ள பூண்டு மண்டிகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதிக விலை கிடைக்கும் என, ஆவலோடு வந்த விவசாயிகளுக்கு, விலை குறைந்து விற்பனை ஆவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவை, மேட்டுப்பாளையம் பூண்டு வியாபாரிகள் சங்க தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம் திம்பம், கர்நாடகா மாநிலத்தில், இம்மாதம் முதல் வாரத்தில் இருந்து, பூண்டு அறுவடை சீசன் துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு, 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், விற்பனைக்கு பூண்டு கொண்டு வந்துள்ளனர். இந்த ஏலத்தில், 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் பங்கேற்றனர். நன்கு முதிர்ந்த பெரிய பல்லுடைய ஒரு கிலோ பூண்டு அதிகபட்சம், 110 ரூபாய்க்கும், சிறிய அளவிலான பூண்டு குறைந்த பட்சம், 25 ரூபாய்க்கும் ஏலம் போனது. பூண்டு வரத்து அதிகமானதால், விலை குறைந்துள்ளது. வருகிற வாரமும் பூண்டு வரத்து அதிகம் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. இவ்வாறு தலைவர் கூறினார்.