மழைநீர் சென்றால் கழிவுநீர் வெளியேறி விடும் அதிகாரி பதிலால் விவசாயிகள் அதிர்ச்சி
சூலுார், : 'மழை நீரை குளத்தில் நிரப்புவதால், குளத்தில் ஏற்கனவே உள்ள கழிவு நீர் தானாகவே வெளியேறி விடுகிறது,' என, அரசு அதிகாரி பதிலால், சூலுார் வட்டார விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.ராவத்தூரை சேர்ந்த விவசாயி கணேசன், விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அளித்த மனுவில், சூலுார் பெரிய குளம், சின்ன குளத்தை தூர் வார வேண்டும். கழிவு நீரை அகற்றி, மழை நீரை விட வேண்டும் எனவும், மீன்கள் குளத்தில் விடுவதை தடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருந்தார்.இதற்கு, கோவை பாசன உபகோட்ட நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் அளித்த பதிலில்,' நீர் வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சூலுார் பெரிய குளம், சின்ன குளத்துக்கு, சமீபத்தில் பெய்த மழையின் மூலம் கிடைத்த மழைநீர் நிரப்பப்பட்டதால் முழு கொள்ளளவுக்கு நீர் நிரம்பி உள்ளது. மேலும் மழைநீரை குளங்களில் நிரப்புவதால், ஏற்கனவே குளத்தில் உள்ள கழிவு நீர் தானாகவே வெளியேறி விடுகிறது. நீர் நிரம்பி உள்ளதால், குளங்களை தற்போது தூர் வார சாத்தியம் இல்லை.நீர் குறைந்த பின், தூர் வார திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசு நிதி பெற்று தூர் வார நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மீன் வளத்துறை மூலம் மீன் வளர்க்க ஏலம் விடப்படுகிறது,' என கூறப்பட்டுள்ளது. இந்த பதிலால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மனுதாரர் கணேசன் கூறுகையில், மழைநீரை குளத்துக்கு விட்டால் ஏற்கனவே குளத்தில் மண்டி கிடக்கும் கழிவுகளும், கழிவு நீரும் எப்படி வெளியேறும். அப்படியே வெளியேறினாலும், வாய்க்கால், வழியோர தடுப்பணைகளுக்கு அந்த கழிவுநீர் செல்லும். அது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.அதனால், குளங்களுக்கு நீர் விடுவதை ஒரு முறை நிறுத்தி, கழிவுகளை வெளியே எடுத்து தூர் வார வேண்டும். அதன் பின்னர், புதிய மழைநீரை குளத்துக்கு விட வேண்டும், என்பதே சுற்றுவட்டார விவசாயிகளின் பல்லாண்டு கோரிக்கையாகும், என்றார்.