பூலாங்கிணறு கால்வாய் பராமரிப்பு விவசாயிகள் வலியுறுத்தல்
உடுமலை : பாசன காலம் துவங்கும் முன், பூலாங்கிணறு கிளைக்கால்வாயில், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்தில், பூலாங்கிணறு கிளைக்கால்வாய் வாயிலாக, 6 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.பி.ஏ.பி., பிரதான கால்வாயில், சர்க்கார்புதுார் ஷட்டரிலிருந்து இந்த கிளை வாய்க்கால் பிரிந்து செல்கிறது. கிளை கால்வாயின் கடைமடை பகுதியாக, குடிமங்கலம் ஒன்றிய பகுதிகள் அமைந்துள்ளன.இந்த கால்வாய், பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. இதனால், கால்வாய் கரை பல இடங்களில், சேதமடைந்து, பரிதாப நிலையில் உள்ளது.குறிப்பாக, வாய்க்காலில், தண்ணீர் அழுத்தம் சீராக செல்ல கட்டப்பட்ட 'சொலீஸ்' அமைப்புகளில், அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பில் தண்ணீர் தேங்கும் போது, உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் விரயம் அதிகரிக்கிறது.இதே போல், பகிர்மான கால்வாய் ஷட்டர் பகுதியிலும் பராமரிப்பு மேற்கொள்ளப்படவில்லை.பாசன காலம் துவங்கும் முன் கால்வாயிலுள்ள, செடி மற்றும் புதர்களை மட்டும் அகற்றி விட்டு, பொதுப்பணித்துறையினர் பிற பணிகளை கண்டுகொள்வதில்லை. இக்கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது.தற்போது, திருமூர்த்தி அணையிலிருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, மூன்றாம் மண்டல பாசனம் துவங்கும் முன், பூலாங்கிணறு கிளை கால்வாயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்; கரைகளை சேதப்படுத்தும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.