உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி பண்டிகை; கடை வீதி களை கட்டியது

தீபாவளி பண்டிகை; கடை வீதி களை கட்டியது

- நிருபர் குழு -தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாட மக்கள் தயாராகிவரும் நிலையில், புத்தாடைகள், பொருட்கள் வாங்க, உடுமலை கடை வீதிகளில் மக்கள் திரண்டதால் களைகட்டியது.தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், நேற்று உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பண்டிகைக்கான உற்சாகம் களை கட்டியது. நேற்று காலை முதலே, உடுமலை கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.புத்தாடைகள் எடுக்கவும், ஆபரணம், வீட்டு உபயோக பொருட்கள் வாங்கவும், பட்டாசு மற்றும் இனிப்பு, காரம் வாங்க என, துணிக்கடைகள், நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை கடைகள். பட்டாசு மற்றும் ஸ்வீட் கடைகளில், தீபாவளி விற்பனை களை கட்டியுள்ளது.கடைகள் அதிகம் உள்ள, தளி ரோடு, வ.உ.சி., வீதி, சீனிவாசா வீதி, கல்பனா ரோடு, பழநி ரோடு என பிரதான ரோடுகளில், மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. ரோடுகளில், தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக கடைகளும் அதிகளவு அமைக்கப்பட்டுள்ளது.இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, கடை வீதிகளுக்குள், நான்கு சக்கரம் மற்றும் கன ரக வாகனங்கள் நுழையாத வகையில், தடுப்புகள் அமைத்தும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.பஸ் ஸ்டாண்ட், ரவுண்டானா சந்திப்பு, பழநி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு ஆகிய பிரதான ரோடுகளும், கச்சேரி வீதி, கல்பனா ரோடு, சீனிவாசா வீதி, வெங்கடகிருஷ்ணா ரோடு சந்திப்பு, கச்சேரி வீதி சந்திப்பு, பழைய பஸ் ஸ்டாண்ட் என, கடை வீதிகள் மற்றும் ரோடுகளும் சந்திக்கும் பகுதியில், கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.பேரிகார்டுகள் வைத்து, வாகனங்கள் மாற்று வழியில் செல்லவும், 50க்கும் மேற்பட்ட போலீசார், இந்த ரோடுகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பாக, பட்டாசுகள் வெடிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி நகரில், தீபாவளி பண்டிகைக்கு, ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், இனிப்பகங்களில் கூட்டம் அலைமோதியது. சாலையோர கடைகளிலும் பொருட்கள் பரபரப்பாக விற்பனையாகின. அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் போன்றவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கினர்.தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பலரும் நேற்று காலையே புறப்பட்டனர். இதனால், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பஸ் ஸ்டாண்டில் பயணியர் கூட்டம் அலைமோதியது.இதனைக் கருத்தில் கொண்டு, பொள்ளாச்சியில் இருந்து, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணியர் கூட்டம் அதிகரித்தபோது, பஸ்சில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டது.பயணியர் பாதுகாப்பு கருதி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை