உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளி பண்டிகை; கோவில்களில் வழிபாடு

தீபாவளி பண்டிகை; கோவில்களில் வழிபாடு

-- நிருபர் குழு -பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஒரு வாரமாக மக்கள் புத்தாடை, பட்டாசு, இனிப்புகள் வாங்க ஆர்வம் காட்டினர். இதனால், கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மக்கள் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை நேற்று பொதுமக்கள் விமரிசையாக கொண்டாடினர். பட்டாசு வெடித்தும், அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு இனிப்புகளை வழங்கியும்; ஒருவொருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

சிறப்பு பூஜை

பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவில், ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தனர்.ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், தீபாவளி பண்டிகையையொட்டி குபரே சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு ஒன்பது வகை அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஒன்பது வகையான பூக்களை கொண்டு அலங்கார பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதனை தொடர்ந்து, முருகபெருமான் சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வால்பாறை அண்ணாநகர், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி கோவில், எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன் கோவில், காமாட்சிஅம்மன் கோவில், ஈட்டியார் கருமாரியம்மன்கோவில், சிறுகுன்றா மாகாளியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

உடுமலை

உடுமலை பகுதிகளில், தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்து மக்கள் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினர்.கோவில்களில், அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், பழச்சாறு, இளநீர், திருநீர், சந்தனம் என பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. சுவாமிகளுக்கு புத்தாடைகள் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகளும் நடந்தன.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், தில்லை நகர் ரத்தின லிங்கேஸ்வரர் கோவில், ஆனந்த சாய் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை