செல்லப்பிராணிகளுக்குவீடு தேடி மருத்துவம்! ஒரு மாதத்தில் 7,514 கால்நடைகளுக்கு சிகிச்சை
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டத்தில், தொலைதுார கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகள், செல்லப்பிராணிகளுக்கு வீடு தேடி சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்தில், 7,514 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை, செப்., 3ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அன்னூர், காரமடை, சுல்தான்பேட்டை, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய 6 ஒன்றியங்களுக்கு தலா ஒரு வாகனம் ஒதுக்கப்பட்டது.இந்த ஆம்புலன்ஸ்கள் வாயிலாக தொலைதுார கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம், மலடு நீக்க சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.இதுகுறித்து கால்நடை பராமரிப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-இந்த நடமாடும் ஆம்புலன்ஸில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு டிரைவர் இருப்பர். காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கால்நடை மருத்துவ சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.பிற்பகலில் அழைப்பு மையம் வாயிலாக தகவல் பெறப்பட்டு, அவசர சிகிச்சை மேற்கொள்ள வாகனம் பயன்படுத்தப்படுகிறது. அவசர சிகிச்சைக்கு 1962 எனும் எண்ணில் அழைக்கலாம்.கடந்த செப்டம்பர் மாதத்தில், 6 ஒன்றியங்களில் உள்ள தொலைதூர கிராமங்களில் 202 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. அதே போல் 732 அவசர கால அழைப்புகள் வாயிலாகவும் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இதன் வாயிலாக மொத்தம், 7,514 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் வாயிலாக 4,002 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.