அணைக்காமல் வீசிய தீக்குச்சியால் ஓட்டலில் தீ விபத்து
கோவை; கோவை பெரியகடைவீதியில் சிகரெட் புகைக்க பற்ற வைத்த தீக்குச்சியை ஓட்டல் மேல் எறிந்ததால் ஓட்டலில் தீவிபத்து ஏற்பட்டது.பெரியகடை வீதியை, சேர்ந்தவர் தீபக்குமார், 26; கே.ஜி., வீதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அவரது ஓட்டலை கடந்து சென்ற இருவர், புகைப்பிடிக்க சிகரெட்டை பற்றியுள்ளனர். பின்னர், அந்த தீக்குச்சியை அணைக்காமல் ஓட்டலை நோக்கி எறிந்து விட்டு சென்றனர்.அதில் ஓட்டல் தார்ப்பாய், 2 பிளாஸ்டிக் பக்கெட் ஆகியவை தீப்பற்றி எரிந்தது. இதைப்பார்த்த தீபக்குமார் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் தீயை அணைத்தார். பின்னர் சம்பவம் குறித்து, தீபக்குமார் பெரியகடை வீதி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தீவிபத்தை ஏற்படுத்தியது கெம்பட்டி காலனி, 4வது வீதியை சேர்ந்த சுரேஷ், 30 மற்றும் தர்மராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.