பழக்குடோனில் தீ விபத்து; பொருட்கள் சேதம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், பழக்குடோன் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி புகை மண்டலமாக மாறியது. கடையில் இருந்த டன் கணக்கான பழங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.பொள்ளாச்சி, நேதாஜி ரோடு முத்தப்பா கவுண்டர் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்த முகம்மது மன்சூர், அவரது தம்பி முகம்மது இஷாக் ஆகியோர், குமரன் நகர் கள்ளுக்குழி மேடு பகுதியில் பழ குடோன் வைத்துள்ளனர்.இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணிக்கு திடீரென பழக்குடோன் தீப்பிடித்து எரியதுவங்கியது. சற்று நேரத்தில் குடோன் முழுவதும் தீ பரவி அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.அப்பகுதி மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு நிலை அலுவலர் கணபதி தலைமையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு தீயணைப்பு வாகனங்களை கொண்டு, தீ அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.கடையில் இருந்த பழப்பெட்டிகள் என அனைத்தும் எரிய துவங்கியதால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீ பரவியது. நகராட்சி லாரிகளில் நீர் கொண்டு வரப்பட்டு அணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்குள் குடோன் முழுவதும் எரிந்தது; அருகில் இருந்த மரத்திலும் லேசாக தீப்பற்றியது. இதையடுத்து, அங்கும் நீர் தெளித்து தீ அணைக்கப்பட்டது. திரண்ட மக்கள்
பழக்குடோன் தீ விபத்து குறித்து தகவல் பரவியதையடுத்து, அப்பகுதி மக்கள், அங்கு திரண்டனர். காற்றுக்கு தீ வேகமாக பரவுவதால், அங்கு நிற்க வேண்டாம் என, கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் மற்றும் போலீசார், பொதுமக்களை வெளியேற்றினர். மேலும், அவ்வழியாக வாகனங்கள் வராமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.'பொக்லைன்' வாகனத்தை கொண்டு கடை மேற்பகுதிகள் இடித்து தீ அணைக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. காரணம் என்ன?
தீ விபத்து குறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பழ குடோன் அருகே உள்ள காலியிடத்தில், பழைய பிளாஸ்டிக் பொருட்களை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். அது காற்றில் பறந்து, பழக்குடோனில் பரவியது தெரிய வந்துள்ளது.பழக்குடோன் உரிமையாளர்கள் கூறுகையில், 'தீ விபத்தில் கடையில் இருந்த, 50 டன் பழங்கள், பணம், கம்ப்யூட்டர் பில் போடுதல், ஏசி என அனைத்தும் எரிந்து விட்டன,' என்றனர்.எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், நகராட்சி கமிஷனர் கணேசன், நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் அரசியல் கட்சியினர் சம்பவ இடத்துக்கு வந்து பாதிக்கப்பட்ட உரிமையாளருக்கு ஆறுதல் கூறினர்.