முதலுதவி சிகிச்சை முறை மக்களுக்கு செயல்விளக்கம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், நடை பயிற்சி மேற்கொள்வோரிடம், நெஞ்சு வலி ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொள்ளாச்சி இந்திய மருத்துவ சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்க அறக்கட்டளை சார்பில், நடை பயிற்சி மேற்கொள்வோரிடம், நெஞ்சுவலி ஏற்பட்டால் அவரை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானாவில் நடந்தது. டாக்டர்கள் கண்ணன், திருமூர்த்தி, சவுந்தரராஜன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆராதானா மருத்துவமனை குழுவினர், '108' ஆம்புலன்ஸ் குழுவினர் இணைந்து, நெஞ்சுவலி ஏற்பட்டு ஒருவர் மயக்கமடைந்தால், முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செயல்விளக்கம் அளித்தனர். பாதிக்கப்பட்ட நபரின் சுவாசம் மற்றும் இதய செயல்பாடு நின்றால், சி.பி.ஆர். சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில், மார்பில் அழுத்தம் கொடுப்பதும், செயற்கை சுவாசம் கொடுப்பதும் அடங்கும். இது மூளை மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டத்தை சீராக வைத்து, உயிரை காப்பாற்ற உதவுகிறது. இந்த முதலுதவி சிகிச்சையால், உயிரை காப்பாற்ற முடியும். முதலுதவி அளிக்கும் போதே மற்றொரு நபர், '108' ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என விளக்கம் அளித்தனர். பாதிக்கப்பட்டவருக்கு, எவ்வாறு மார்பில் அழுத்த கொடுக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவ குழுவினர் செயல்விளக்கம் அளித்தனர்.