புரட்டாசி முடிந்ததால் மீன் விலை உயர்வு
கோவை: புரட்டாசி முடிந்து ஐப்பசி பிறந்ததால், கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன் விலை உயர்ந்துள்ளது. கோவை மீன் மார்க்கெட்டுக்கு, கேரளா, ராமேஸ்வரம், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தினமும், 50 முதல் 60 டன் வரை வரத்து உள்ளது. புரட்டாசி காரணமாக கடந்த ஒரு மாதமாக, விலை குறைந்து இருந்தது. ஐப்பசி பிறந்து விட்டதால், மீன் விலை உயர்ந்துள்ளது. உக்கடம் மீன் மார்க்கெட்டில் பெரிய வஞ்சரம் கிலோ, 900 ரூபாய்க்கும், துண்டு வஞ்சரம், 1200 ரூபாய்க்கும், அடுத்த ரகம் 750 ரூபாய்க்கும், மஞ்சள் வால் ஊளி, 550 ரூபாய்க்கும், இறால் 780 ரூபாய்க்கும், கண்ணாடி பாறை 500 ரூபாய்க்கும், கருப்பு வாவல், 480 ரூபாய்க்கும், மத்தி 250 ரூபாய்க்கும், நெத்திலி, 320 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது. மீன் மொத்த விற்பனையாளர் சங்க செயலாளர் காதர் கூறுகையில், ''புரட்டாசி முடிந்தால் மீன் விலை ஏறுவது வழக்கம்தான். கார்த்திகை பிறந்தால், மீண்டும் விலை குறையும்,'' என்றார்.