உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தென்னையில் ஊடுபயிராக மலர் சாகுபடி; மலரியல் துறை பரிந்துரை

தென்னையில் ஊடுபயிராக மலர் சாகுபடி; மலரியல் துறை பரிந்துரை

கோவை; நோய் மற்றும் பூச்சித் தாக்குதலால் தென்னை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் பகுதிக்கு ஏற்ற ஊடுபயிராக மலர் சாகுபடியைத் தேர்வு செய்யலாம் என, தமிழ்நாடு வேளாண் பல்கலைஅறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, பல்கலையின் மலரியல் துறை தலைவர் கங்கா கூறியதாவது: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கேரள வேர் வாடல் நோய், வெள்ளை ஈக்கள் ஆகிய நோய் மற்றும் பூச்சித் தாக்குதல் தென்னை விவசாயிகளைக் கடுமையாக பாதித்துள்ளது. மகசூலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தென்னந் தோப்புகளில் பல்கலையின் பல்வேறு துறை சார்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, நோய் மற்றும் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தென்னைக்கு மாற்றுப் பயிர் அல்லது ஊடுபயிராக, தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதற்கான வழிகளும் ஆலோசிக்கப்பட்டன. மலரியல் துறையைப் பொறுத்தவரை, ஊடுபயிராக மலர் சாகுபடி மேற்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஹெலிகோனியா, பேர்டு ஆப் பேரடைஸ், அல்பீனியா, ஆர்கிட், ஆந்தூரியம் போன்றவை நிழற்பாங்கான பகுதியில் வளர்பவை. இவற்றைத் தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இவற்றுக்கு குறைவான நீர் போதுமானது. மெதுவாக வளரும் தன்மை கொண்டவை. ஊட்டச்சத்தும் அதிகம் தேவைப்படாது. மாற்றுப்பயிர் பட்டர்புரூட், மங்குஸ்தான், கேரம்போலா போன்ற மித வெப்ப மண்டல சூழலில் வளரும் பழப் பயிர்களையும் நடலாம். வெயில் அடர்த்தி குறைவாகவும், வெளிச்சம் குறைவாக, ஈரப்பதம் சற்று அதிகமாக தேவைப்படும். இந்த பருவநிலை, தோப்பு பகுதிகளில் மைக்ரோ கிளைமேட் என்ற அடிப்படையில் ஓரளவு போதுமானதாக இருக்கும். அதேசமயம் அனைத்துப் பயிர்களும் அனைத்து இடங்களுக்கும் ஏற்றவை எனக் கூறிவிடமுடியாது. தென்னை விவசாயிகள் அணுகினால், அவர்களுக்கு ஏற்ற ஊடுபயிர், மாற்றுப்பயிர்களைப் பரிந்துரை செய்யத் தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ