சுற்றுலா பயணியரை கண்காணிக்க வனக்குழு: அசம்பாவிதம் தவிர்க்க முன்னேற்பாடு
பொள்ளாச்சி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகப்படியான சுற்றுலா பயணியர், வால்பாறை மலைப்பாதையில் பயணிப்பார்கள் என்பதால், வனக்குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்கள் மற்றும் வனவிலங்குகளை காண அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர். இதனால், அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகளும் செயல்படுகின்றன. சுற்றுலா பயணியர் வருகை காரணமாக, வனத்தை ஒட்டிய சாலையில், வனத்துறை வாயிலாக ஆங்காங்கே, விழிப்புணர்வு அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், குரங்குகளுக்கு உணவளிக்காதீர், யானை கடக்கும் பகுதி, வாகனங்களை நிறுத்தக் கூடாது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழையக் கூடாது, எனபன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இருப்பினும், சிலர், மலைப்பாதையில், வாகனங்களை நிறுத்தி 'போட்டோ' எடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் முற்படுகின்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால், வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் கூறியதாவது: ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியரிடம், பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம், மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொள்வது, காலி உணவு பொட்டலங்களை திறந்தவெளியில் வீசி செல்வது, குரங்கு, வரையாடுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, தெரிவிக்கப்படுகிறது. அதேபோல, வாகனங்களில், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என, ஆய்வு செய்து, துணிப்பை பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வனப்பகுதிக்குள் சென்று 'போட்டோ' எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு அவரவர் சொந்த வீட்டில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாலும், சுற்றுலா பயணியரின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாறு, கூறினர்.
மலைப்பாதையில் கவனம்!
சமீபத்தில், ஏற்காடு மலைப்பதையில், ஒருவர் 'ரோலர் ஸ்கேட்டிங்' செய்த ரீல்ஸ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதேபோல, மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து வீடியோ எடுக்க பலரும் முற்படுகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினரால் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வால்பாறை மலைப்பாதை ஆபத்தான கொண்டைஊசி வளைவுகளை கொண்டது. இப்பாதையில் சாகசம் செய்ய முற்படும் போது, மற்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. அதனால், போலீஸ், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை இணைந்து கண்காணிக்க வேண்டும்.