பத்திரிகையாளர்களை விரட்டிய மாஜி அமைச்சர்; வால்பாறையில் அ.தி.மு.க., கூட்டத்தில் சலசலப்பு
வால்பாறை: வால்பாறை அ.தி.மு.க., கூட்டத்தில், செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களை மாஜி அமைச்சர் வேலுமணி விரட்டியதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் வால்பாறையில், நகர அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள் வெங்கடாசலம், ராஜ்குமார், ஏ.டி.பி., தொழிற் சங்க மாநில தலைவர் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். வால்பாறை நகரச்செயலாளர் மயில் கணேஷ் வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கடந்த நான்கு ஆண்டுகளில் வால்பாறையில் எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. எல்லாமே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தான் நடைமுறையில் உள்ளன. வரும் சட்டசபை தேர்தலில், கட்சி நிர்வாகிகள் நல்ல முறையில் பாடுபட்டு, ஓட்டு வங்கியினை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு முறை நடைபெறும் தேர்தலிலும், ஆனைமலைப்பகுதியில் தான் அதிக அளவில் ஓட்டு கிடைக்கிறது. வால்பாறையில் கோஷ்டி பூசலால் தான், ஓட்டு வங்கி குறைந்து கொண்டே வருகிறது. தி.மு.க., ஆட்சியை விரட்டியடிக்க, கட்சி நிர்வாகிகள் கருத்து வேறுபாடு களை மறந்து, பூத் கமிட்டி களுடன் இணைந்து செயல்பட வேண்டும். சட்ட சபை தேர்தலில் அதிக ஓட்டுக்களை பெற்றுத்தருபவர்களுக்கு, தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும். வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை கண்டறிய வேண்டும். அ.தி.மு.க,வின் ஓட்டு வங்கி வால்பாறையில் அதிகரிக்க, கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அரவணைத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக கூட்டம் துவங்கியதும் வேலுமணி பேசுகையில், ''பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தால் வெளியே போகவும். நீங்க என்னத்த போடுவீங்கன்னு எங்களுக்கும் தெரியும்'' என்று மிரட்டாத குறையாக, பத்திரிகையாளர்களை மாஜி அமைச்சர் விரட்டியதால் கூட்டத்தில் திடீர் சல சலப்பு ஏற்பட்டது. பின்னர் பத்திரிகையாளர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.