உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

கழிவுநீர் வெளியேறுவதால் துர்நாற்றம்; தீர்வு காண மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி ; பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறியதால் மக்கள் அவதிப்பட்டனர்.பொள்ளாச்சியில், பாதாள சாக்கடை திட்டம் கடந்த, 2016ம் ஆண்டு, 109.62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்பட்டது. தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, 170 கோடி ரூபாயில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதற்காக, சந்தை பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அடைப்பு, சீரமைப்பு பணி மேற்கொள்ளும் பொருட்டு, ஆங்காங்கே ஆள் இறங்கும் குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன.இவை தற்போது, கழிவுநீர் வெளியேறும் குழிகளாக மாறியுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டுநர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இது குறித்து புகார்கள் எழுந்ததும் கழிவுநீர் வெளியேறுவது சீரமைக்கப்பட்டது.பொதுமக்கள் கூறியதாவது:ராஜாமில் ரோட்டில், ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் அதிகளவு வெளியேறி ரோட்டில் வெள்ளமாக ஓடுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வப்போது, அதிகாரிகள் வந்து சீரமைப்பதும், மீண்டும் வழிந்தோடுவதுமாக உள்ளது.கழிவுநீர் ரோட்டில் வழிந்தோடுவதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. கடைகளில் உள்ளோர், வியாபாரம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். அடிக்கடி வெளியேறும் கழிவுநீரால், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளை முறையாக பார்வையிட்டு, மண் தேங்கியுள்ளதா என கண்டறிந்து அவற்றை துாய்மை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ