மேலும் செய்திகள்
கிரைம் செய்திகள்
15-Oct-2025
கோவை: விபத்து நடந்ததாக அழைத்து சென்று, இளைஞரிடம் ஏ.டி.எம்.மற்றும் மொபைல்போனை பறித்து சென்ற நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். சிங்காநல்லுார் போயர் வீதியை சேர்ந்தவர் மாரீஸ்வரன், 26. தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம், வசந்தா மில் பஸ் ஸ்டாப் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய நபர் ஒருவர், தனது நண்பர் விபத்தில் சிக்கி உள்ளதாகவும், அங்கு அழைத்து செல்லுமாறும் கெஞ்சினார். அந்நபரை தனது பைக்கில் ஏற்றிக் கொண்டு, விபத்து நடந்த இடத்துக்கு சென்றார். அங்கு சென்ற போது, விபத்து நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுகுறித்து மாரீஸ்வரன் அந்நபரிடம் கேட்டார். அப்போது அங்கு மேலும் இருவர் வந்தனர். மூவரும் சேர்ந்து, மாரீஸ்வரனை தாக்கி அவரது பையில் இருந்த மொபைல்போன், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்து தப்பினர். இதுகுறித்து, மாரீஸ்வரன் தனது நிறுவன மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், சிங்காநல்லுார் போலீசார் வழக்கு பதிந்து, வழிப்பறியில் ஈடுபட்ட மூவரையும் தேடி வருகின்றனர்.
15-Oct-2025