நண்பர்கள் மீண்டும் சந்திப்பு ;முன்னாள் மாணவர்களுக்கு பூரிப்பு
கோவை:ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில், 1973ல் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், ஓட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. முன்னாள் மாணவர் பேரவை தலைவர் ராசு தலைமை வகித்தார். பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. முன்னாள் மாணவர் பேரவை ஆலோசகர் மணிமுகம் கூறியதாவது: ஏழு ஆண்டுகளாக, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி வருகிறோம். ஒண்டிப்புதுார் அரசு பள்ளியில், 1973ல் பயின்றவர்கள் இன்றைக்கு பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் வங்கி துறைகளில் பணிபுரிகிறோம். கோவையில் வசிப்பவர்கள் மாதந்தோறும் சந்தித்து உரையாடுகிறோம். நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் மூன்று பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம்.பருவ நினைவுகளை பகிர்ந்து கொள்ளும்போது மகிழ்ச்சியாக இருக்கும். சில நண்பர்களை இழந்து இருப்பது மனதுக்கு வருத்தமாக இருக்கும். வயோதிகத்தால், உடல் தளர்ந்து இருந்தாலும், இச்சந்திப்பு புத்துணர்வு தருகிறது. இவ்வாறு, அவர் கூறினார். முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் தங்க வேலு, சுந்தர்ராஜன், சந்திர சேகரன், கோபாலகிருஷ்ணன், கனகராஜ் உள்ளிட்ட 60 க் கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.