உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஸ்கோர்சில் அரசு ஊழியர் குடியிருப்பு இடிந்தது! ஆபத்து தெரிந்தும் காலி செய்ய மறுப்பு

ரேஸ்கோர்சில் அரசு ஊழியர் குடியிருப்பு இடிந்தது! ஆபத்து தெரிந்தும் காலி செய்ய மறுப்பு

கோவை: ரேஸ்கோர்சில் ஐம்பதாண்டை கடந்த, அரசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று, நள்ளிரவு இடிந்து விழுந்தது. நல்லவேளை, உயிர்ப்பலியோ பாதிப்புகளோ இல்லாமல், அருகே வசித்தவர்கள் தப்பினர். இந்த சம்பவத்தையடுத்து, மோசமான அரசு குடியிருப்புகளில் குடியிருப்போர் உடனடியாக காலி செய்ய வேண்டும் என, கோவை கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கோவை, ரேஸ்கோர்சில் கலெக்டர் பங்களாவின் பின் பகுதியில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான, 202 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இதில் ஏ, பி, சி, டி என்று நான்கு டைப்களில், 27 பிளாக்குகளில் அரசு ஊழியர்கள் வசிக்கின்றனர். இக்குடியிருப்பு, 1973 -75 ஆண்டில் கட்டப்பட்டது. 50 ஆண்டுகளை கடந்த நிலையில் இக்கட்டடம் சிதிலமடைந்து, பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத அளவில் இருந்தது. வீட்டுவசதி வாரியம் இந்த கட்டடங்களை காலி செய்து, வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்தியது. 'அடுக்குமாடி குடியிருப்புகள், கட்டடங்கள் பழுதடைந்து மோசமாக இருப்பதால், இந்த வீடுகளில் யாரும் குடியிருக்க வேண்டாம்; இந்த அறிவிப்பை மீறி யாரேனும் குடியிருந்தால் அதற்கு வீட்டு வசதி வாரியம் பொறுப்பேற்காது' என்று, நோட்டீஸ் வழங்கியது. நோட்டீஸ் வழங்கி ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில், இனியும் அந்த வீடுகளை அரசு ஊழியர்கள் காலி செய்து, ஒப்படைக்காமல் உள்ளனர். திடீரென இடிந்தது இச்சூழலில், கலெக்டர் பங்களாவுக்கு பின் பகுதியில், 'ஏ 'டைப் வீடுகள் உள்ள ஐந்து கட்டடங்களில், 3 எண் பிளாக்கில் உள்ள 6 வீடுகள், சில தினங்களுக்கு முன் நள்ளிரவு, பலத்த சப்தத்துடன் இடிந்து விழுந்தது. இடிந்த மூன்றாம் எண் பிளாக்கிற்கு முன், 2 எண் பிளாக்கும், பின்னே 5 எண் பிளாக்கும், பக்கவாட்டில் நான்கு, ஒன்று ஐந்து ஏ என்ற மூன்று பிளாக்குகள் உள்ளன. இந்த பிளாக்குகளில் ஒவ்வொன்றிலும், இரண்டு குடும்பங்கள் வசிக்கின்றன. நெ.1 பிளாக்கில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்துக்கு சொந்தமான, இரண்டு ரேஷன்கடைகள் செயல்படுகின்றன. பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அமைந்துள்ள, பகுதியில் உள்ள அரசு கட்டடத்தில் கூட்டுறவுத்துறைக்கு சொந்தமான ஒரு ரேஷன் கடை செயல்படுகிறது. அங்கும், மக்கள் அன்றாடம் வருகின்றனர். இது தவிர, இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் போலீஸ் கமிஷனர் அலுவலகம், நீதித்துறை, அரசு கலைக்கல்லுாரி, அரசு மருத்துவக்கல்லுாரி டீன் என்று, பல துறை அதிகாரிகள் குடியிருக்கின்றனர். இதே போல், டி.ஆர்.ஓ. பங்களா வரையும் பி.எஸ்.என்.எல். அலுவலகம் வரையும், வரிசையாக அரசு அடுக்குமாடி கட்டடங்கள் அமைந்துள்ளன. இதில் வசிக்கும் அரசுப்பணியாளர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக விரைவாக காலி செய்து வாரியம் வசம் ஒப்படைத்துவிட்டு வெளியேற, வீட்டுவசதி வாரியம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய கோவை மண்டல செயற்பொறியாளர் ஜேக்கப்நாயகம் கூறியதாவது: அடுக்குமாடி கட்டடங்கள் சிதிலமடைந்துள்ளன. குடியிருப்பதற்கு லாயக்கற்று உள்ளன. அங்கு வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று, எச்சரிக்கை விடுத்தோம். காலி செய்ய மறுக்கின்றனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் உதவியோடு, மீண்டும் ஒரு முறை இறுதி எச்சரிக்கை விடுக்கப்படும். கணபதியில் 90 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இவை சிதிலமடைந்து குடியிருக்க லாயக்கற்று உள்ளது. இதை இடித்து அப்புறப்படுத்த, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு வீடு இடிக்கும் பணி துவங்கியுள்ளது. ஆனாலும் வீடுகளை காலி செய்ய மறுத்து, மீதமுள்ள அரசு ஊழியர்கள் தொடர்ந்து வசிக்கின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை வலுத்து வருவதால், அரசு குடியிருப்புகளில் வசிப்பவர்கள் விரைவில் காலி செய்வது நல்லது.

நல்ல நிலையிலும் வீடுகள்!

n சரவணம்பட்டியில் 138 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இடிக்க அரசுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. n எஸ்.ஐ.எச்.எஸ்.,காலனியில் 234 வீடுகள் உள்ளன. அனைத்தும் காலிசெய்து ஒப்படைக்கப்பட்டு விட்டன. இடிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை n ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் சாலையில், 200 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. வீடுகளை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கப்பட்ட சூழலில் பெரும்பாலானவர்கள் காலிசெய்து விட்டனர். இனியும் 70 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இடிக்க அரசு உத்தரவு பிறப்பிக்கவில்லை. n ஆர்.எஸ்.புரம் புண்ணியகோடி வீதி உள்ளிட்ட பகுதிகளில், 124 அடுக்குமாடி வீடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வீடுகள், பொது ஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு, குடியிருக்கும் சூழலில் உள்ளன. அதனால் இது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

'அரசு உத்தரவை மதிக்க வேண்டும்'

கலெக்டர் பவன்குமார் கூறியதாவது: வீட்டுவசதி வாரியத்தில், எச்சரிக்கையை மீறி சிதிலமடைந்த வீடுகளில் யாரும் வசிக்க வேண்டாம். அந்த வீடுகளில் குடியிருப்பதற்கு, புதிய 'அலாட்மென்ட்' உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழைக்காலம் துவங்கிவிட்ட சூழலில், அரசு ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற வேண்டும். அரசு உத்தரவை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை