உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நடத்துனருக்கு சீருடை வழங்க மறுத்த வழக்கில் அரசு பஸ் ஜப்தி

நடத்துனருக்கு சீருடை வழங்க மறுத்த வழக்கில் அரசு பஸ் ஜப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை : அரசு போக்குவரத்து கழக நடத்துனருக்கு சீருடை தர மறுத்ததாக, தொடரப்பட்ட வழக்கில், பஸ் ஜப்தி செய்யப்பட்டது.திருப்பூர் மாவட்டம், உடுமலை, பாலப்பம்பட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கோவை கோட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.பணி நிரந்தரம் செய்யப்பட்ட பிறகு, 2016ல், இவருக்கான சீருடை, தையற்கூலி, காலணி, பணப்பை ஆகியவை வழங்கப்படவில்லை. சீருடை இல்லாமல் பணியில் இருந்ததால், போக்குவரத்துக் கழகம் அவரை, 46 நாட்கள் தற்காலிக பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து, கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம், சீருடை உள்ளிட்ட பொருட்களுக்கு, அவருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை, தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட நாட்களுக்கு பிழைப்பூதியம் ஆகியவற்றிற்கு, 46,583 ரூபாய் வழங்க, 2023, அக்., 20ல் உத்தரவிட்டது. ஆனால், அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் பணம் வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது. இதனால் அதே கோர்ட்டில், வக்கீல் சதீஷ்சங்கர் வாயிலாக நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். விசாரித்த கூடுதல் தொழிலாளர் நீதிமன்றம், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன் பேரில், காந்திபுரம்- அன்னுார் செல்லும், தடம் எண்:45 சி, அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

மற்றொரு பஸ் ஜப்தி

அன்னுார் அருகேயுள்ள நெகமம் புதுாரை சேர்ந்தவர் சக்திவேல். கோவை கோட்ட போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை செய்து வருகிறார். 2007ல் பணி நிரந்தரம் செய்யப்பட்ட இவருக்கு, தற்காலிகமாக பணியாற்றிய காலத்திலிருந்து முன் தேதியிட்டு, நிலுவை தொகை தரக்கோரி கோவை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.முன் தேதியிட்டு, 57,000 ரூபாய் நிலுவை தொகை வழங்க கோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாகம், சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. விசாரித்த ஐகோர்ட், கீழ் கோர்ட் பிறப்பித்த உத்தரவுப்படி, மனுதாரருக்கு முன்தேதியிட்டு நிலுவை தொகை வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தது.ஆனால், ஐகோர்ட் உத்தரவை நிறைவேற்ற, அரசு போக்குவரத்து கழகம் தவறியதால், கோவை கூடுதல் தொழிலாளர் நீதிமன்றத்தில், நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர்.கோர்ட் உத்தரவுப்படி, காந்திபுரம்- மருதமலை செல்லும், தடம் எண்: 70, அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ram pollachi
செப் 21, 2024 13:27

சட்டையில் பெயர், பதவி, பேட்ஜ் எண் எதுவும் பார்வைக்கு படும்படி வைப்பது இல்லை. அடையாள அட்டையை கழுத்தில் மாட்டிக் கொண்டு வயிற்றில் தொங்க விடுவதால் பயன் இல்லை...


N Annamalai
செப் 21, 2024 06:57

நீதிமன்றம் முழுவதும் பேருந்து நிறுத்த வேண்டும் .பிறகு மக்கள் பயணம் செய்ய தினம் நீதிமன்றத்திற்கே வர வேண்டும் .


GMM
செப் 21, 2024 06:14

அரசு பஸ் பொது மக்கள் அன்றாட போக்குவரத்து வாகனம். ஜப்திக்கு பதில் உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மாத சம்பளத்தை நிறுத்தி வைக்கமுடியும்.


A Viswanathan
செப் 21, 2024 13:04

இதற்கு காரணமான அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய வேண்டும்.அப்போது தான் மற்றவர்களுக்கும் பயம் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை